தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தாமரைமொழி கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான பைனான்சியர் கந்தையா. சாத்தான்குளம், தட்டார்மடம், நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். கந்தையா முதலில் மெஞ்ஞானபுரம் அருகேவுள்ள மாநாடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், திடீரென அவரது மனைவி உயிரிழந்துவிட்டார். பின்னர், 2009 ஆம் ஆண்டு தாமரைமொழியைச் சேர்ந்த மணிமங்கை என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்தார். ஆனால், திருமணமான சில வருடங்களிலேயே, மணிமங்கை மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அவரை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்.
இதையடுத்து மூன்றாவதாக, அதே ஊரைச் சேர்ந்த புஷ்பா என்ற பெண்ணை திருமணம் செய்து, கடந்த 10 ஆண்டுகளாக அவருடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஜூலை 16 ஆம் தேதி இரவு தட்டார்மடம் பஜாரில் கந்தையாவும், அவரது இரண்டாவது மனைவி மணிமங்கையின் தம்பி சிவசூரியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடயே தகராறு முற்றிய நிலையில், சிவசூரியன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, கந்தையாவை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஸ்டெல்லா பாய், காவல் உதவி ஆய்வாளர் பொன்முனியசாமி தலைமையிலான போலீசார் கந்தையாவின் உடலை மீட்டு, பிரேதபரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து சிவசூரியனை தேடி வந்தனர். இந்த சூழலில் ஜூலை 17 ஆம் தேதி நள்ளிரவு, திருநெல்வேலி மாவட்டம் பெரியதாழை குட்டம் அருகே சிவசூரியனை காவலர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னரிடம் அவரிடம் நடத்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவலை வெளிவந்திருக்கிறது.
அதில், “எனது அக்கா மணிமங்கையை விட்டுவிட்டு, கந்தையா மூன்றாவதாக ஒரு பெண்ணை 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இது எங்கள் குடும்பத்தினருக்கு அப்போதே பிடிக்கவில்லை. ஆனால், என் அக்காவின் மருத்துவத்துக்கும், குடும்ப பராமரிப்புக்கும் உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்திருந்தார். சில மாதங்கள் மட்டுமே அக்காவின் சிகிச்சைக்காக பணம் கொடுத்தார். பின்னர், அவர் சிகிச்சைக்கு பணம் தர மறுத்து வந்தார். பண நெருக்கடியில் இருப்பதாக பொய் சொன்னார். ஆனால், மூன்றாவதாக திருமணம் செய்த பெண்ணுடன் சுகபோகமாக வாழ்ந்து வந்தார். இதனால், அவருக்கும் எங்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று மாலையில் தட்டார்மடம் பஜாரில் வைத்து, அவரிடம் என் அக்காவின் சிகிச்சைக்கு மட்டுமாவது மனிதாபிமானத்துடன் பணம் தருமாறு கேட்டேன். அப்போது, 'உன் அக்காவையும் உன்னையும் காலி செய்துவிட்டு வெறும் 50 ஆயிரம் ரூபாயில் கொலை கேசையே முடித்துவிடுவேன்' என என்னை மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நான், அவர் முந்துவதற்கு முன்பு நாமே முந்தி கதையை முடித்துவிடுவோம் என எண்ணி, வீட்டுக்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து மெயின் பஜாரில் வைத்து கந்தையாவை ஓட ஓட வெட்டிக் கொலை செய்துவிட்டு, அவர் கதை முடிந்ததும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்" எனத் தெரிவித்திருப்பதாக காவல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தட்டார்மடம் பைனான்சியர் குடும்பத் தகராறில் மைத்துனரே மெயின் பஜாரில் வைத்து ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.