புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் புள்ளாண்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன் (65). இவரது மனைவி வசந்தா (60). இவர்களது மகன்கள் முருகேசன் (38), பாஸ்கரன் (33). இதில் முருகேசன், கடந்த பல வருடங்களாக மாலத்தீவில் வேலை செய்து வருகிறார். பாஸ்கர், வடகாடு பேப்பர்மில் சாலையில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடை வைத்திருந்தார். இருவருக்கும் திருமணமாகி முருகேசனுக்கு விமலாராணி (26) என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளது. பாஸ்கரன், ஊர்காவல் படையில் பணியில் இருந்த பானுமதி என்ற பெண்ணை காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து அவருக்கு வசந்த் (5) என்ற மகன் உள்ளார்.
பாஸ்கர் மாற்று சாதிப் பெண்ணை திருமணம் செய்ததால் பெற்றோர் அந்தப் பெண்ணை ஏற்கவில்லை. அதனால் பானுமதி, பாஸ்கரனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். ஆனால், அவர்களது குழந்தை வசந்த் பாஸ்கருடன் உள்ளார். ஒரே வீட்டில் பாஸ்கரின் பெற்றோர், அண்ணன் முருகேசன் குடும்பம் கீழ் வீட்டிலும், பாஸ்கர் தன் மகனுடன் மேல் வீட்டிலும் வசிக்கின்றனர். வசந்த், புள்ளாச்சி குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று (27-06-25) காலை பாஸ்கர், வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் வடகாடு பேப்பர்மில் சாலையில் சாலையோர பள்ளத்தில் ரத்த காயங்களுடன் தனது மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இறந்து கிடப்பதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக இது குறித்து பாஸ்கரின் பெற்றோருக்கும், வடகாடு போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். பாஸ்கர் நிலைதடுமாறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, பாஸ்கரின் தந்தை வீரப்பன் அதிகாலை 3 மணிக்கு அடையாளம் தெரியாத 3 பேர் வந்து கோயிலுக்கு போவோம் என்று பாஸ்கரனை அழைத்துச் சென்றதாகக் கூறியுள்ளார். இந்த நிலையில் தான், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பாஸ்கர் விபத்தில் இறக்கவில்லை கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வந்தது. அதன் பிறகு, போலீசார் புலன் விசாரணையை முடுக்கிவிட்டனர். சில செல்போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், தன் தம்பி இறந்த தகவல் அறிந்து அண்ணன் முருகேசன் ஊருக்கு வருவதாக அவர்களது அப்பா வீரப்பன் கூறியுள்ளார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பாஸ்கரின உடலை உறவினர்கள் தகனம் செய்தனர். அதன் பிறகு பாஸ்கரின் அண்ணன் முருகேசன், முருகேசன் மனைவி விமலா ராணி, அப்பா வீரப்பன், அம்மா வசந்தா ஆகியோரிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது, பாஸ்கர் மனைவி பானுமதியை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளாததால் அவர் பிரிந்து சென்ற பிறகு அவர்களது குழந்தையை முருகேசன் மனைவியே கவனித்து வந்துள்ளார். இதனிடையே, பாஸ்கரனுக்கும் அவரது அண்ணி விமலா ராணிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்ததால், பாஸ்கர் பெற்றோரை தாக்கியுள்ளார். இந்த தகவல் வெளிநாட்டில் உள்ள முருகேசனுக்கு தெரிந்த நிலையில் தன் மனைவியிடம் விசாரித்ததில், தன்னை பாஸ்கர் மிரட்டுவதாக விமலாராணி கூறியுள்ளார். இந்த நிலையில் 26ஆம் தேதி தான் ஊருக்கு வருவதாகவும், தன்னுடன் கேரளாவில் இருந்து சிலர் வந்து பாஸ்கரை கொலை செய்யப்போவதாகவும், அதனால் குழந்தைகளுடன் அம்மா வீட்டுக்கு போய்விடு என்று மனைவி விமலா ராணியிடம் முருகேசன் கூறியுள்ளார். அதன்படி, 26ஆம் தேதி இரவு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த முருகேசன், மாடியில் தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி பாஸ்கர் தலையிலும், நெஞ்சிலும் கல்லைத் தூக்கிப் போட்டார். இதில் பாஸ்கர் நிலைகுலைந்த போது ஒரு கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். அதன் பின்னர், பாஸ்கரின் உடலை ஒரு பெட்சீட்டில் வைத்து மாடியில் இருந்து கீழே கொண்டு வந்து தன் தந்தை, தாயாரிடம் சொல்லிவிட்டு பாஸ்கரின் மோட்டார் சைக்கிளிலேயே அவரது சடலத்தை ஏற்றியுள்ளார். இதையடுத்து தன் தந்தையை அழைத்து தன் உடலுடன் தம்பியின் சடலத்தை கட்டச் சொல்லியுள்ளார். அதன் பின்னர், தன் வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் கொண்டு போய் பள்ளத்தில் பாஸ்கர் சடலத்தை தள்ளிவிட்டு விபத்து போல காண்பிக்க மோட்டார் சைக்கிளையும் அருகில் தள்ளிவிட்டுள்ளார். வீட்டிற்கு வந்த முருகேசன், ரத்தக்கறை படிந்த துணிகளை அள்ளிக் கொண்டு கல்லணைக் கால்வாய் தண்ணீரில் வீசிவிட்டு வீட்டிற்கு வந்த போது மாடியில் படிந்திருந்த ரத்தக் கறையை பெற்றோர் சுத்தம் செய்திருந்தனர்.
அதன் பிறகு, தான் வெளிநாட்டில் இருந்து வருவது போல காட்ட வெளியூர் செல்ல முருகேசன் திட்டமிட்டுள்ளார். அதன்படி தந்தை வீரப்பன், தன் மகன் முருகேசனை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று மாங்காடு பூச்சிகடை பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளார். அப்போது, வந்த பேராவூராணி பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டிற்கு வந்து எதுவும் தெரியாதது போல் வீரப்பன் இருந்துள்ளார். இந்த நேரத்தில், தன்னுடைய அம்மா வீட்டில் இருந்த விமலா ராணி தந்து மாமியாருக்கு போன் செய்து சம்பவம் முடிந்ததா? எனக் கேட்டுள்ளார். இதனிடையே, பேராவூரணி பஸ் ஏறிய முருகேசன், குருவிக்கரம்பை பகுதியில் பாஸ்கரனின் செல்போனில் இருந்து சிம் கார்டை உடைத்துப் போட்டுவிட்டு கிழக்கு கடற்கரைச் சாலையில் ராமேஸ்வரம் வரை சென்று தனது ரத்தக்கறை படிந்த சட்டை மற்றும் பாஸ்கரனின் செல்போன் ஆகியவற்றை கடலில் வீசியுள்ளார். அதன் பின்னர், எதுவும் தெரியாதது போல் தன் தம்பி சாவிற்காக இரவில் வெளிநாட்டில் இருந்து வந்தது போல் காட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணையில், முருகேசன் பாஸ்போர்ட்டில் அவர் முதல் நாளே வந்துவிட்டு நடிப்பதும் தெரியவந்துள்ளது.
இதனை கேட்ட புதுக்கோட்டை ஏடிஎஸ்பி முரளிதரன் உள்ளிட்ட போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். விசாரனை முடிவில் கொலை செய்து நாடகமாடிய அண்ணன் முருகேசன், அண்ணி விமலாராணி, அப்பா வீரப்பன், அம்மா வசந்தா ஆகியோரை கைது செய்து கொலைக்கு பயன்படுத்திய கல்லையும் கைப்பற்றியுள்ளனர். முருகேசனின குழந்தைகளை, அவரது மாமியார் அழைத்துச் சென்றார். ஆனால் பாஸ்கரின் 5 வயது குழந்தையை யாரும் அழைத்துச் செல்ல முன்வராததால் பெண் போலீசார் பாதுகாப்புடன் புதுக்கோட்டை காப்பகத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவம் அனைவரையும் கண் கலங்கச் செய்தது.