ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் பாலத்தில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் தண்ணீர் லாரி ஒன்று சிக்கி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராமநாதபுரம் மண்டபம் வடக்கு மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். துறைமுகத்தில் நிற்கும் படகுகளுக்கு பொருட்களை கொண்டு செல்லும் பாலம் மிகவும் மோசமடைந்த நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து முன்னதாகவே பலமுறை மீனவர்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருந்தனர். இருப்பினும் பாலம் சரி செய்யப்படாத நிலையிலேயே இருந்தது.
இந்நிலையில் இன்று காலை அந்த வழியாக படகுகளுக்கு தண்ணீர் ஏற்றிச் சென்று கொண்டிருந்த மினி டேங்கர் லாரியானது திடீரென பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதனால் படகுகளுக்கு பொருள்களை ஏற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் இருந்த இருவர் சிறு காயங்களுடன் உயிர்த் தப்பினர். லாரியை மீட்கும் பணியை மீனவர்கள் உதவியுடன் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.