வங்கதேசத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் வன்முறைகளால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் தற்போது ஒரு பள்ளியில் நடந்த வன்முறை சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபரித்பூர் ஜில்லா பள்ளியின் 185வது ஆண்டு விழாவின் கொண்டாட்ட நிறைவு விழாவின் போது ஒரு வன்முறை சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று தேசிய மற்றும் நினைவுக் கொடிகளை ஏற்றுதல், தேசிய கீதம் இசைத்தல், உறுதிமொழி ஏற்கும் விழாக்கள் மற்றும் நகரம் வழியாக ஒரு வண்ணமயமான ஊர்வலம் ஆகியவற்றுடன் கொண்டாட்டங்கள் தொடங்கின.
இதனையடுத்டு வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ச்சியில் கலாச்சார நிகழ்ச்சிகள், குலுக்கல் சீட்டுப் போட்டி மற்றும் ஜேம்ஸின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இசை நிகழ்ச்சி ஆகியவை நடக்க இருந்தன. இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவில், வெள்ளிக்கிழமை இரவு அங்கு வந்த கும்பல் ஒன்று புகழ்பெற்ற ராக் இசைக்கலைஞர் ஜேம்ஸின் இசை நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தியதில் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனால் ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நிகழ்ச்சியில் 'நகர் பவுல்' என்று பிரபலமாக அறியப்படும் மற்றும் வங்க தேசத்தின் மிகப்பெரிய ராக் நட்சத்திரமாகக் கருதப்படும் ஜேம்ஸின் இசைநிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில், விழா மேடையை ஒரு கும்பல் தாக்கியது.
செங்கற்களைக் கொண்டு அந்த கும்பல் தாக்குதல் நடத்தியதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பின்பு சம்பவ இடத்தில் இருந்த மாணவர்கள் அந்த கும்பலை துரத்தியடித்தனர். இந்தப் பதற்றமான சூழ்நிலை காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக, விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். “இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள், ஏன் நடத்தினார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. மேலும் வன்முறையைத் தடுப்பதற்காக, இந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்றும் அவர்கள் கூறினர்.
பின்னர் ஜேம்ஸும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார். இசை மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு எதிரான நபர்களின் தூண்டுதலால் ஏற்பட்ட சம்பவம் தான் இது என்றும் கூறப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு எதிரான சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவதை இந்தச் சம்பவம் பறைசாற்றுவதாகக் கூறி, இது தங்களுக்கு கவலையளிப்பதாகவும் கூறினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/27/bangaladesh-music-2025-12-27-22-38-51.jpg)