கேரளாவில் மூளையை தின்னும் அமீபா பாதிப்பு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் நிலையில் தமிழகத்தில் இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் ''இது 95% தொற்று நோய் அல்ல. அதில் நாம் உறுதியாக இருக்கலாம். கொரோனா மாதிரி இது தொற்று நோய் அல்ல. தொட்டால் வந்துவிடும்; மூச்சுக்காற்று பட்டால் வந்துவிடும் என்பது போன்றது அல்ல என்பது உறுதியானது. சம்பந்தப்பட்ட மருத்துவ வல்லுநர்களை இரண்டு நாட்களாகவே கேட்டுக் கொண்டிருக்கிறோம். இது தொற்று நோய் இல்லை என்று தெரியவந்துள்ளது. எனவே பெரிய அளவில் பதற்றப்பட வேண்டிய அளவுக்கு பயம் இல்லை. ஆனாலும் கேரளாவில் அசுத்தமான குளம், குட்டைகள், நீர் நிலைகளில் குளித்ததால் இந்த அமீபா தொற்று ஏற்பட்டு அதன் காரணமாகத்தான் மூளைக் காய்ச்சல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/01/a5010-2025-09-01-15-31-57.jpg)
இதனால் நோய் பாதிப்புக்கு உள்ளவர்களுக்கு கடுமையான தலைவலி, காய்ச்சல், வாந்தி, மனக்குழப்பங்கள், கழுத்து வலி, நடத்தை மாற்றங்கள், மயக்கங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. உடனடியாக கேரள சுகாதாரத்துறை அவர்களுக்கான சிகிச்சைகளை வழங்கி அதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
இதன் மூலம் கேரளா பார்டரில் இருந்து இங்கே வருபவர்கள் பரிசோதித்து அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை. இது தொற்றுநோய் இல்லை. தமிழ்நாட்டிலும் கூட இது மாதிரியான அசுத்தமடைந்த குளம் குட்டைகளில் குளிப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. நிறையப் பண்ணை வீடுகளின் நீச்சல் குளங்கள் நீண்ட நாட்கள் பராமரிப்பு இல்லாமல் இருக்கும். அதிலும் குளிக்கக் கூடாது. அதைப் பராமரித்து அதற்கான ரசாயனம் மருந்துகளை தெளித்து பின்னர் குளிப்பது நல்லது'' என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே கேரளாவில் பரவும் அமீபா தொற்று காரணமாக மூன்று மாத குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இதன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் நீச்சல் குளங்களை ஆய்வு செய்ய தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல மாசடைந்த நீர் நிலைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.