dmk Photograph: (minister)
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள கொண்டாபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த மோகித் என்ற மாணவன் உணவு இடைவெளியின் பொழுது வெளியே வந்த பொழுது பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஏழாம் வகுப்பு மாணவன் மோகித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே, ரொம்ப நாளாகவே அந்த சுவர் இடியும் நிலையில் இருந்ததாகவும், அதை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டதே இந்த விபத்தில் காரணம் என்றும் ஊர் பொதுமக்களும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிறுவனின் உடல் திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் சிறுவனின் உடலைப் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வாங்க மறுத்து இன்று காலை முதல் மருத்துவமனை வளாகத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர், வருவாய்த் துறையினர் என அனைத்து தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியும் பெற்றோர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர். ஆட்சியர் நேரில் வந்து விசாரித்துப் பேச வேண்டும்; மாணவனின் குடும்பத்திற்கு ஒருகோடி ரூபாய் வழங்க வேண்டும்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் அமைச்சர் நாசர் ஆகியோர் அங்கு வந்த நிலையில் மாணவனின் உடலைப் பார்த்துவிட்டு பெற்றோர்களிடம் ஆறுதல் சொல்லிவிட்டு சென்றனர். அப்போது அமைச்சர் நாசரின் காரை பொதுமக்கள் மற்றும் சிறுவனின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Follow Us