தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மேலக்களக்குடி பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான காவியா. இவர் அருகே உள்ள அரசு ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். வழக்கம்போல் 27 ஆம் தேதி காலை தனது ஸ்கூட்டியில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் ஸ்கூட்டியை வழிமறித்து கத்தியால் கொடூரமாகக் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் காவியா கொல்லப்பட்டுக் கிடப்பது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காவியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே காவியாவை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே அம்மாபேட்டை காவல் நிலையத்தில் 29 வயதான பெயிண்டர் அஜித்குமார், “நான்தான் காவியாவைக் கொன்றேன்” என்று சரணடைந்துள்ளார். உடனடியாக அஜித்குமாரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. ஆசிரியையான காவியாவும் பெயிண்டர் அஜித்குமாரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெளியே ஒன்றாகச் செல்வது, செல்போனில் நீண்ட நேரம் பேசுவது என்று தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்றாலும், காவியாவின் பெற்றோருக்கு அஜித்குமாருடனான காதலை ஏற்க மனமில்லை. எனவே வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.
அதன்படி உறவுக்காரப் பையன் ஒருவருடன் காவியாவுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டு, அண்மையில் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. ஆனால் இந்தத் தகவலை மறைத்து காவியா தொடர்ந்து அஜித்குமாருடன் பேசி வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி இரவு அஜித்குமாருடன் செல்போனில் பேசிய காவியா, தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக கூறிய அவர், மாப்பிள்ளையுடன் எடுத்த புகைப்படங்களையும் அனுப்பி வைத்திருக்கிறார். இதைப் பார்த்து கோபமடைந்த அஜித்குமார் காவியா மீது கடும் ஆத்திரமடைந்துள்ளார்.
மறுநாள் காலை காவியா பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது மாரியம்மன் கோயில் அருகே ஸ்கூட்டியை அஜித்குமார் வழிமறித்துள்ளார். “ஏன் நிச்சயதார்த்தம் ஆனதை என்னிடம் மறைத்தாய்? என்னை மறந்துவிட்டு வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாயா?” என்று கடும் வாக்குவாதம் செய்துள்ளார். தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த அஜித்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவியாவின் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாகக் குத்திக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அஜித்குமாரைக் கைது செய்தனர்.
பட்டப்பகலில் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது காதலனாலேயே குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us