உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் 24 வயதான நிகில். அவரது காதலி 22 வயதன சோனம். கடந்த 2023 ஆம் ஆண்டு ஹல்த்வானியில்(Haldwani) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நிகிலும் சோனமும் சந்தித்துகொண்டனர். அந்தச் சந்திப்பிலிருந்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது. இதன் காரணமாக, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர் (லிவிங் டு கெதர்). இந்தக் காலகட்டத்தில் சோனம் கர்ப்பமானார். ஆனால், திருமணம் ஆகாததாலும், பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டு வந்ததாலும், நிகிலும் சோனமும் குழந்தை வளர்க்க விரும்பவில்லை.
இதனைத் தொடர்ந்து, கருவைக் கலைக்க முடிவு செய்த அவர்கள், அதற்காகச் சில முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும், அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. கடந்த ஆண்டு தொடக்கத்தில் சோனம் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதன் பின்னர், இருவரும் தங்களது குழந்தையை அல்மோராவில் அடையாளம் தெரியாத ஒரு நபருக்கு 2 லட்சம் ரூபாய்க்கு விற்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, நிகிலும் சோனமும் டெல்லிக்கு இடம்பெயர்ந்து, அங்கு தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர். திமர்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் நிகில் வேலை பார்த்து வந்தார். அப்போது, உள்ளூர் வாசியான ரஷ்மியுடன் சோனத்திற்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினர். இந்த நேரத்தில், நிகிலுக்கும் சோனத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால், சோனம் தோழி ரஷ்மியின் வீட்டில் தங்கத் தொடங்கினார்.
இந்தச் சூழலில், சோனம் ரஷ்மியின் கணவர் துர்கேஷுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக நிகில் சந்தேகப்பட்டுள்ளார். மேலும், இருவரும் வாட்ஸ்அப் மூலம் அடிக்கடி பேசிய உரையாடல்களை நிகில் பார்த்து, சோனத்தைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சோனம் மீண்டும் கர்ப்பமானார். இந்த முறை நிகில் குழந்தையை வளர்க்க விரும்பிய போதிலும், சோனம் அதற்கு மறுப்பு தெரிவித்து கருவை கலைத்துள்ளார். துர்கேஷின் ஆலோசனையின் பேரில் தான் கருவைக் கலைத்துள்ளார் என்று நிகில், சோனம் மற்றும் துர்கேஷ் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
இதையடுத்து சோனம் ரஷ்மியின் வீட்டில் தங்கி, அவரது குழந்தைகளைப் பராமரித்து வந்தார். ஜூலை 9 ஆம் தேதி, ரஷ்மியும் அவரது கணவர் துர்கேஷும் தங்களது 5 வயது மூத்த மகளைப் பள்ளியில் இருந்து அழைத்து வரச் சென்றனர். அவர்களது 6 மாதக் குழந்தையை சோனத்திடம் விட்டுவிட்டுச் சென்றனர். சோனம் தனியாக இருப்பதை அறிந்த நிகில், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது சண்டையாக மாறியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நிகில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சோனத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். மேலும், தனது குழந்தையை கருவில் கலைத்ததற்கு பழிவாங்கும் விதமாக, வீட்டில் இருந்த துர்கேஷின் 6 மாதக் குழந்தையின் கழுத்தையும் அறுத்து கொடூரமாகக் கொலை செய்தார். இருவரது வாயிலும் டேப்(Tape) ஒட்டி, சத்தம் வெளியே கேட்காமல் பார்த்துக் கொண்டார்.
பின்னர், தன்னைக் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக செல்போனை வீட்டிலேயே விட்டுவிட்டு தப்பியோடினார். துர்கேஷும் அவரது மனைவி ரஷ்மியும் வீடு திரும்பியபோது, சோனமும் 6 மாதக் குழந்தையும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பவத்திற்குக் காரணமான நிகிலைத் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இதனிடையே, நிகில் உத்தரகாண்டில் உள்ள அவரது நண்பரின் வீட்டில் தலைமறைவாக இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உத்தரகாண்டிற்கு விரைந்த டெல்லி காவல்துறையினர், நிகிலைக் கைது செய்து டெல்லிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சோனத்தையும் 6 மாதக் குழந்தையையும் கொலை செய்ததை நிகில் ஒப்புக் கொண்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சந்தேகத்தின் பேரில் காதலியையும், அவருக்கு அடைக்கலம் அளித்தவரின் 6 மாதக் குழந்தையையும் இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்த இந்தச் சம்பவம், தலைநகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.