Boyfriend strangled girlfriend to lost with dupatta information revealed during investigation
கர்நாடக மாநிலம், தார்வாட்டின் காந்தி சவுக் பகுதியில் ஜகியா முல்லா (20) என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவர் மருத்துவ துறையில் பயின்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதியன்று மாலை வேலை நிமித்தமாக ஆய்வகத்திற்கு செல்வதாக வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால், அன்று இரவு வெகு நேரமாகியும் ஜகியா, வீட்டிற்க்கு வரவில்லை. குடும்பத்தினர் அவரது செல்போனுக்கு அழைத்த போது, போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஜகியாவின் குடும்பத்தினர் பதற்றத்திற்குள்ளாகினர்.
இந்த சூழ்நிலையில், தார்வாட் பகுதியின் சாலையோரத்தில் முகத்தில் காயங்களுடன், கழுத்தில் துப்பட்டா சுற்றப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக 21ஆம் தேதி காலையில் காவல்துறையிடம் இருந்து வந்த தகவலை அடுத்து, ஜகியா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அந்த இடத்திற்கு சென்றனர். அங்கு சடலமாக கிடந்த பெண் ஜகியா தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டது. மேலும், ஜகியாவின் போன் நம்பரும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில், சாபிர் முல்லா என்பவர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர்.
அதன்படி சாபிரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், காவல்துறையினர் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக அவர் பதிலளித்துள்ளார். இதனால் அவர் மீதான சந்தேகம் இன்னும் அதிகமாகியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். காவல் துறையினரின் இந்தத் தீவிர விசாரணையில், தான் அந்த கொலைக் குற்றத்தை செய்ததாக சாபிர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, இந்த கொலையில் சாபிரின் நண்பரும் இதில் சம்பந்தம் இருப்பதாக கருதிய காவல்துறை, மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், சாபிர் முல்லா என்பவர் ஜகியாவின் நெருங்கிய உறவினர். சாபிர் மற்றும் ஜகியா இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து, இவர்கள் இருவரின் வீட்டினரும் இவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், சம்பவத்தன்று இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது திருமணம் குறித்த பேச்சுவார்த்தையின் போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சாபிர், ஜகியாவின் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், சடலத்தை அந்த பகுதியில் இருந்த ஒரு புதர் செடியில் வீசிவிட்டு சென்றுள்ளார். அந்த வழியாக வந்தவர்கள், ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறை சடலத்தை மீட்டு, விசாரணையின் மூலம் கிடைத்த விவரங்களின் அடிப்படையில் ஜகியாவின் வீட்டிற்கு தகவல் தெரிவித்தனர். ஜகியாவின் குடும்பத்தினர் அங்கு வந்து, அது ஜகியா தான் என உறுதி செய்தனர்.
இந்த விசாரணையின் போதும் சாபிர் அங்குதான் இருந்தார். இருப்பினும் அவர் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. ஆனாலும், ஜகியாவின் செல்போனை ஆராய்ந்த போது, அவர் கடைசியாக சாபிருடன் பேசியதும், சம்பவத்தின் போது அவர் ஜகியாவுடன் தான் இருந்துள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதன்காரணமாக விசாரணை செய்த போது அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us