ஆந்திரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தை சேர்ந்தவர் 22 வயதான இளம்பெண் ஓலேட்டி புஷ்பா. இவருக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு மகன் உள்ளார். கருத்துவேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து 4 வயது மகனுடன் தனியாக வாழ்ந்து வந்த புஷ்பாவிற்கு, கார் மெக்கானிக்காகப் பணிபுரிந்த ஷேக் ஷம்மாவுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறியதைத் தொடர்ந்து, இருவரும் பி.சவரம் கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் - மனைவி போன்று (லிவ்விங் டூ கெதர்) சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அவர்களுடன் புஷ்பாவின் நான்கு வயது மகனும் வசித்து வந்தார்.
இதனிடையே, ஷேக் ஷம்மா மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருந்ததாகவும், அடிக்கடி புஷ்பாவுடன் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், பணத் தேவைக்காக புஷ்பாவை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு வற்புறுத்தி வந்திருக்கிறார். ஆனால், இதற்கு புஷ்பா மறுப்பு தெரிவித்துள்ளார். அதனால், ஷேக் ஷம்மா, புஷ்பாவை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜூலை 16, ஆம் தேதி, இந்த விவகாரம் தொடர்பாக ஷேக் ஷம்மாவுக்கும் புஷ்பாவுக்கும் இடையே மீண்டும் பிரச்சினை எழுந்திருக்கிறது. அப்போது, புஷ்பா பாலியல் தொழிலுக்கு செல்ல மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஷேக் ஷம்மா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் மார்பு, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே புஷ்பா பரிதாபமாக உயிரிழந்தார்.
புஷ்பாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது தாய் கங்கா மற்றும் சகோதரர் வினய் ஆகியோரையும் ஷேக் ஷம்மா தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ராஜோலு மண்டல காவல்துறையினர், புஷ்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தடயங்களைச் சேகரித்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ஷேக் ஷம்மாவைக் கைது செய்ய தனிப்படை அமைத்து, தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பாலியல் தொழிலுக்கு செல்ல மறுப்பு தெரிவித்ததால் இளம்பெண்ணை, ஆன் நண்பரே குத்தி கொலை செய்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.