நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பாலு - வசந்தா தம்பதியர். இவர்களது மகள் சௌந்தர்யா, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதற்காக, மேவளூர்குப்பம் பகுதியில் தனியாக வீடு எடுத்து, தனது தோழிகளுடன் தங்கி வந்தார். அந்த வீட்டிற்கு அருகே, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞரும் வீடு எடுத்து தங்கி, அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

அருகருகே உள்ள வீடுகள் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர், நாளடைவில் இந்தப் பழக்கம் நெருக்கமாகி, காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து, இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க, தினேஷும் சௌந்தர்யாவும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதனால், கடந்த ஏப்ரல் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து, திருமண தேதி உறுதி செய்யப்பட்டது. ஆனால், நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, சௌந்தர்யா வேறொரு ஆண் நண்பருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தினேஷுக்குத் தெரியவந்ததும், அவர் சௌந்தர்யாவை அழைத்து பலமுறை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், சௌந்தர்யா இதனைப் பொருட்படுத்தாமல், தினேஷின் தொலைபேசி எண்ணை பிளாக் செய்துவிட்டு, ஆண் நண்பருடன் தொடர்ந்து பழகி வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், 19ஆம் தேதி இரவு சௌந்தர்யா வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து அங்கு சென்றுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே இதுகுறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், வாக்குவாதம் முற்றி தகராறாக மாறிய நிலையில்,  தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தினேஷ் சௌந்தர்யாவின் முகம், கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாகக் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில், ரத்த வெள்ளத்தில் சௌந்தர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், சௌந்தர்யாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், ஆண் நண்பருடன் சௌந்தர்யா பழகியதால் ஆத்திரமடைந்த தினேஷ் அவரைக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், கொலை செய்துவிட்டு தப்பியோடிய தினேஷ், நாகப்பட்டினம் காவல் நிலையத்தில் சரணடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

நிச்சயிக்கப்பட்ட காதலியை காதலனே கொடூரமாகக் கொலை செய்த இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.