திருமணத்தை மீறிய உறவு; பெண் மற்றும் அவரது மகள்களைக் கொடூரமாகக் கொன்ற ஆண் நண்பர்!

policenew

திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்ட சண்டையால் ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு மகள்களை கொடூரமாக ஒரு நபர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம், காக்கிநாடா மாவட்டம் சமர்லேகோட்டா பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான முல்பூர்த்தி மாதுரி என்ற பெண். இவருக்கு பிரசாத் என்ற நபருடன் திருமணமாகி 8 மற்றும் 6 வயதில் இரண்டு மகள்கள் இருந்தனர். இந்த நிலையில், ஆகஸ்ட் 3ஆம் தேதி அதிகாலையில் இரவு பணி முடிந்து பிரசாத் வீட்டிற்கு திரும்பிய போது கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. இதனால், அவர் வீட்டு சுவர் மீறி வீட்டிற்கு நுழைந்து பார்த்த போது, மாதுரியும் தனது இரண்டு மகள்களும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

இதில் பிரசாத் தான் இந்த கொலை செய்திருப்பார் என்று அக்கம்பக்கத்தினர் சந்தேகம் எழுப்பியதை அடுத்து அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், அந்த விசாரணையில் தான் கொலை செய்யவில்லை என்று அவர் உறுதிப்பட கூறியுள்ளார். இதற்கிடையில், மாதுரி 36 வயதுடைய சுரேஷ் என்ற நபருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகப் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில், சுரேஷை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

கடந்த 2 ஆண்டுகளாக மாதுரியும் சுரேஷும் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர். இதற்கிடைப்பட்ட காலத்தில் சுரேஷ், மாதுரிக்காக கிட்டத்தட்ட ரூ.7 லட்சம் வரை செலவு செய்துள்ளார். இதனிடையே, தனது மனைவியை விட்டுவிட்டு தன்னுடன் வாழுமாறு மாதுரி தொடர்ந்து சுரேஷை வற்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், ஆகஸ்ட் 2ஆம் தேதி தனது கணவர் வீட்டில் இல்லை என்று கூறி சுரேஷை தனது வீட்டிற்கு மாதுரி அழைத்துள்ளார். அப்போது தங்க முலாம் பூசப்பட்ட துணி துவைக்கும் இயந்திரத்தை வாங்கித் தருமாறு மாதுரி கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த சுரேஷ், மாதுரியை கம்பியால் தாக்கி கொலை செய்தார். அதன் பின்னர், குழந்தைகள் தன்னை பார்த்திருக்கலாம் என்று பயந்து குழந்தைகளையும் கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த கொலை குற்றத்தை ஒரு கொள்ளைச் சம்பவம் போல் காட்டுவதற்காக மாதுரியின் தங்க நகைகள், இரண்டு மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை வீட்டிலிருந்து திருடி அங்கிருந்து சுரேஷ் தப்பிச் சென்றுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சுரேஷை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Andhra Pradesh love illegal police
இதையும் படியுங்கள்
Subscribe