வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது சிறுவன் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த அண்டாவில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல்லில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை அடுத்துள்ளத வாய்க்காங்கரை என்ற பகுதியில் வசித்து வருபவர்கள் முனியப்பன்-காயத்ரி தம்பதி. இவர்களுக்கு துரைப்பாண்டி என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளது. தாய் காயத்ரி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார். முனியப்பன் பாத்திர வியாபாரம் செய்து வரும் நிலையில் வழக்கம்போல வியாபாரத்திற்காக வெளியே சென்றுவிட்ட நிலையில் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இருந்துள்ளனர்.

இரண்டரை வயது சிறுவன் துரைப்பாண்டி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தில் சிறுவனை தேடி வந்தனர். அப்பொழுது வீட்டுக்கு அருகிலேயே வைக்கப்பட்டிருந்த தண்ணீர் நிரப்பப்பட்ட அண்டாவில் சிறுவன் துரைபாண்டி கிடந்துள்ளார். இதனால் அலறித்துடித்த தாய் காயத்ரி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக சிறுவனை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவன் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. இதனால் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.