ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (24.09.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரயில்வே ஊழியர்களின் சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கும் விதமாக, 10 லட்சத்து 91 ஆயிரத்து 146 ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் (PLB - Productivity Linked Bonus ) ரூ.1865.68 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம் தகுதியுள்ள ரயில்வே ஊழியருக்கு ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜை அல்லது தசரா விடுமுறை நாட்களுக்கு முன்பு போனஸ் வழங்கப்படுகிறது.இந்த ஆண்டும்,சுமார் 10.91 லட்சம் அரசிதழ் பதிவு பெறாத ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்திற்குச் சமமான போனஸ் தொகை வழங்கப்படுகிறது. ரயில்வே ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக அவர்களை ஊக்குவிக்கும் ஒரு ஊக்கமாக போனஸ் வழங்கப்படுகிறது. தகுதியுள்ள ஒவ்வொரு ரயில்வே ஊழியருக்கும் 78 நாட்கள் ஊதியத்திற்குச் சமமான போனஸாக அதிகபட்ச தொகை 17 ஆயிரத்து 951 ரூபாய் கிடைக்கும்.
இந்த போனஸ் தொகை ரயில்வே ஊழியர்களான தண்டவாள பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள் (காவலர்), நிலைய மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், புள்ளிவிவர பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் பிற 'சி' தொகுதி ஊழியர்களுக்கு வழங்கப்படும். 2024-25 ஆம் ஆண்டில் ரயில்வேயின் செயல்திறன் மிகவும் சிறப்பாக இருந்தது. ரயில்வே 1614.90 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றி, கிட்டத்தட்ட 7.3 பில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றது குறிப்பிடத்தக்கது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.