மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் போரிவேடில் தர்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த தர்கா ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் தர்காவை இடிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தர்காவின் காஜி சலாவுதீன் ரெஹ்மதுல்லா ஹூல் என்ற அறக்கட்டளை சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.எஸ். கட்கரி மற்றும் கமல் கட்டா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அப்போது அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்ராஜீவ் பாட்டீல், தர்கா 1982ஆம் ஆண்டுக்கு முந்தையது. 1982ஆம் ஆண்டு விற்பனைப் பத்திரம், 1989 நிலப் பதிவுகள் மற்றும் 1990ஆம் ஆண்டு அறக்கட்டளை ஆணையரிடம் பதிவு செய்ததைக் கண்டு அந்த கட்டமைப்பு சட்டப்பூர்வமானது என்று வாதிட்டார். இதையடுத்து தானே நகராட்சி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.ஆப்தே, இந்த கட்டிடத்திற்கு எந்தவித சட்டப்பூர்வ அனுமதியும் இல்லை என்றும் கட்டுமான அனுமதி ஒருபோதும் வழங்கப்படவில்லை என்றும், இடிப்பு அறிவிப்பு முன்னரே வெளியிடப்பட்டது ஆனால் காவல்துறை கட்டுப்பாடுகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக இடிப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் கூறியதாவது, ‘கட்டுமானத்திற்கான உரிமை அல்லது கட்டமைப்பும் இருந்ததற்கான எந்த ஆதாரத்தையும் அறக்கட்டளை வழங்கத் தவறிவிட்டது. வெறும் கூற்றுக்கள் மற்றும் பொதுமக்களின் உணர்வுகள் மூலம் ஆக்கிரமிப்பை முறைப்படுத்த முடியாது. ஒரு குறிப்பிட்ட நிலத்தில் கும்பல் சீற்றமும், மக்களின் கால்தடங்களும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பு என்பதை நிரூபிக்கும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. தர்கா அறக்கட்டளை எந்த கட்டுமானத்திற்கும் அனுமதி பெறவில்லை. கட்டமைப்பு 20,000 சதுர அடிக்கு மேல் விரிவடைந்துள்ளது. அறக்கட்டளை, நிலத்தை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அதை அபகரித்துள்ளது’ என்று கூறி இடிப்பு உத்தரவை முடிவு செய்தனர். மேலும் அறக்கட்டளை சார்பில் அளிக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தனர்.

ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்கா, உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதி என பல்வேறு மசூதிகள், இந்து கோயில்களை இடித்துக் கட்டப்பட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு அந்தந்த மாநிலங்களில் விசாரணை நடைபெற்று வருகின்றன. இதில், ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு நீதிமன்றத்திற்கு அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி, தொல்லியல் ஆய்வு நிறுவனம் அங்கு ஆய்வு நடத்தி வருகிறது. இதற்கிடையில் உத்தரப் பிரதேசம் சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஜமா மசூதி, இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டிருந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் மசூதியை ஆய்வு செய்ய உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்தாண்டு நவம்பர் 19ஆம் தேதி உள்ளூர் போலீஸார் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் மசூதியில் ஆய்வு செய்யப்பட்டது.  அதன்படி, ஆய்வு செய்வதற்காக வந்த ஆய்வுக் குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மீது கல் வீச்சு தாக்குதல் நடந்தது. இதனையடுத்து, ஏற்பட்ட வன்முறையில் அங்கு 4 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.