திருமண தகராறுகளில் பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த மே 2023இல் திருமணம் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில், டிசம்பர் 2023இல் தனது கணவர், அவரது இரண்டு சகோதரிகள் மற்றும் அவரது அத்தை ஆகியோர் வரதட்சணை கொடுமை செய்வதாகவும், நிலம் மற்றும் சொத்துக்கள் கேட்பதாகவும், கணவர் உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்தியதாகவும் பெண் நாக்பூரில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நாக்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த சூழ்நிலையில், குடும்ப பிரச்சனையை தீர்த்துவிட்டதாகவும், அதனால் தங்களுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த ஆணும் அவரது குடும்பத்தினரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் நிதின் சாம்ப்ரே மற்றும் எம்.எம்.நெர்லிகர் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், புகார் அளித்த அந்த பெண்ணும் நீதிமன்றத்தில் ஆஜராகி, பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், வாழ்க்கையில் முன்னேற விரும்புவதாகவும் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது, ‘இப்போதெல்லாம் பல காரணங்களால் திருமண முரண்பாடு ஏற்படுவது இன்றைய சமூகத்தில் ஒரு அச்சுறுத்தலாக மாறிவிட்டது. இந்த முரண்பாடு ஏற்படுவது ஒரு டிரண்டாக மாறிவிட்டது. இரு தரப்பினருக்கும் இடையிலான சிறிய பிரச்சனை முழு வாழ்க்கையும் கெடுத்துவிடுகிறது. குடும்ப வன்முறைச் சட்டம், இந்து திருமணச் சட்டம் மற்றும் சிறப்பு திருமணச் சட்டம் போன்ற சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. பெண்களைப் பாதுகாக்கும் இது போண்ற சட்டங்களை தவறாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்துவிட்டது.
இதனால், நீதிமன்றத்திற்கு சுமையாக இருப்பது மட்டுமல்லாமல் இரு தரப்பினருக்கும் மன மற்றும் உடல் ரீதியான உளைச்சலும் ஏற்படுகிறது. மேலும், மோதல்கள், நிதி இழப்பு, குழந்தைகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு மீள முடியாத தீங்கு ஆகியவையும் ஏற்படுகின்றன. எனவே, இருதரப்பினரும் தங்கள் பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டதால் வழக்கு, குற்றப்பத்திரிகை ஆகியவற்றை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வது நீதிமன்றத்தின் கடமையாகும்’ என்று கூறி கணவர் குடும்பத்தினர் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டனர்.