அண்மையாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் வந்த வண்ணம் உள்ளது.
அண்மையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் அது புரளி என தெரியவந்தது. அதேபோல் புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை, புதுச்சேரி முதல்வர் இல்லம், தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வீடு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 09/09/2025 அன்று கூட சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதோடு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருக்கும் சுங்க இல்ல தலைமை அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்டதால் உள்ளே இருந்த ஊழியர்கள் பதறியடித்து வெளியே வந்தனர். உயர்நீதிமன்றத்திற்கு மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை மைய அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜிஎஸ்டி அலுவலகத்திற்கு துணை முதல்வர் உதயநிதி பெயரில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு பஞ்சாப் முதல்வர் பகவத் மான் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.