தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாணவர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு எடுத்து வந்த நிலையில் அது வெடித்து இரண்டு பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, பாரதி நகர்ப் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் பரணி என்ற 17 வயது மாணவன் கல்லூரிக்கு வரும் பொழுது புத்தகப் பையில் நாட்டு வெடிகுண்டை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

புத்தகப்பைக்குள் இருக்கும் நாட்டு வெடிகுண்டை எடுப்பதற்கு இரண்டு தரப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டியில் திடீரென அது வெடித்துச் சிதறியது என்று கூறப்படுகிறது. இதில் ஒரு மாணவருக்கு வலது கை முழுவதும் சிதறியுள்ளது. மற்றொரு மாணவருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காயமடைந்த இரண்டு மாணவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் திருவிழா நேரங்களில் பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டு என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் மற்றொரு தகவலாக முன்விரோதத்தால் மாணவன் நாட்டு வெடிகுண்டைக் கல்லூரிக்கு எடுத்து வந்த வீசியதாகவும் கூறப்படுகிறது. காரணம் அந்த மாணவன் 'உங்களை சும்மா விடமாட்டேன்' என எச்சரிக்கும் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.