பெரம்பலூர் அருகே பெட்ரோல் பங்கை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர் பள்ளத்தில் விழுந்து சிக்கிக் கொண்ட நிலையில் பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

பெரம்பலூரை ஒட்டிய திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எழும்பலூர் அடுத்துள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத அந்த பெட்ரோல் பங்கை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்காக பல்வேறு கூலித் தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தனர்.

Advertisment

பெட்ரோல் பங்கில் எரிபொருள்களை சேர்த்து வைக்கும் டேங்கர் உள்ள பகுதியில் உள்ள பழைய டேங்கரை எடுத்துவிட்டு புதிய டேங்கரை அமைப்பதற்கான பணி இன்று நடைபெற்று வந்தது. இந்தநிலையில் பெரம்பலூர் களரம்பட்டி பகுதியைச் சேர்ந்த வேலுசாமி (51) டெங்கரை எடுப்பதற்கான பள்ளத்தில் இறங்கி பணி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மண் சரிந்தது. இதில் மண்ணுக்கடியில் வேலுசாமி சிக்கிக்கொண்டார்.

அங்கிருந்தவர்கள் எவ்வளவோ முயன்றும் வேலுச்சாமியை மீட்க முடியாததால் பெரம்பலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பலமணிநேரம் போராடி உயிரிழந்த நிலையில் வேலுசாமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வேலுசாமியின் மனைவி பழனியம்மாள் மற்றும் அவருடைய மகன் பிரவீன் ராஜ், வெண்ணிலா, பூர்விகா ஆகிய இரண்டு மகள்களும் தந்தையின் உயிரிழப்பு செய்தியைக் கேட்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

Advertisment