வங்கதேசத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு ஷேக் ஹசீனாவின் தலைமையிலான ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்பு, இடைக்கால ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி அந்நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) அதிகப்படியான இடங்களை வென்றுள்ளது. அதாவது, மொத்தமுள்ள 300 இடங்களில் பிஎன்பி கூட்டணி 212 இடங்களையும், ஜமாத் இ இஸ்லாமி கூட்டணி 68 இடங்களையும் வென்றுள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து பி.என்.பி.யின் தலைவர் முகமது தாரிக் நாட்டின் புதிய பிரதமராகிறார். புதிய அரசிற்கான பதவி ஏற்பு விழா நாளை (17/02.2026) நடைபெற உள்ளது. இதில், வங்கதேச ஜனாதிபதி முகமது சஹாபுதீன் பதவியேற்கும் அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நாராயன்க்கஞ் நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பி.என்.பி.யின் கட்சி அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம், அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கையில், "அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அலுவலகத்தின் கண்ணாடிகளை உடைத்து பெட்ரோல் அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைப் பற்ற வைத்து அலுவலகத்திற்குள் வீசியுள்ளனர். அலுவலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதால், நாற்காலிகள் உட்பட அங்கிருந்த மரச்சாமான்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளன. இந்த தாக்குதல் அரசியல் எதிரிகளால் நடத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. தற்போது, சந்தேகத்திற்குரிய இருவரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us