அண்மைக் காலமாகவே அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்காக விவசாயிகள் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லாததால் செங்கோட்டையன் தனது அதிருப்தியை முதன்முதலில் பொதுவெளியில் வெளிப்படுத்தினார். அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டங்களை அவர் தவிர்த்தார், மேலும் எடப்பாடியின் தீவிர ஆதரவுத் தலைவர்களுடனான நெருக்கத்தைக் குறைத்துக்கொண்டார்.

Advertisment

இதைத்தொடர்ந்து, பாஜகவின் டெல்லி தலைமையின் தலையீட்டால் எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் டையேயான மோதல் சற்று மௌனமாகியது. இந்த சூழலில் இன்று செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசிய செங்கோட்டையன், “கட்சி ஒன்றுபட வேண்டும். வெளியே சென்றவர்களை நாம் அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். ‘மறப்போம், மன்னிப்போம்’ என்று வெளியே சென்றவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேர் சென்று, இதுகுறித்து முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமானவரிடம் வலியுறுத்தினோம். ஆனால், பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்ற கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்கவில்லை.

வெளியே சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு வருவதற்கு எந்தவித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. ‘எங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்று மட்டுமே அவர்கள் கூறுகிறார்கள். யார் யாரை இணைக்கலாம் என்பதை கட்சியின் பொதுச்செயலாளரே முடிவு செய்யலாம். கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்து வெளியே சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட வேண்டும்.

விரைவாக முடிவெடுத்தால் மட்டுமே வெற்றி இலக்கை அடைய முடியும். ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் விரும்புகின்றனர். நான் விடுக்கும் கோரிக்கையை ஏற்றால், பழனிசாமியின் பரப்புரையில் பங்கேற்பேன். பத்து நாட்களுக்குள் கட்சியில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இல்லையெனில், ஒத்த கருத்து உள்ளவர்களை ஒன்றிணைத்து அதற்கான முயற்சிகளில் இறங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்றார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, “செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்பதை அவர் நிரூபித்துள்ளார்; அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது ஒவ்வொரு தொண்டனின் எதிர்பார்ப்பு ஒன்றுபட்ட அதிமுகவால் தான் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்..” என்று வி.கே.சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.