தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது முதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.

அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் ஏற்கனவே தொகுதி வாரியாக தேதிகளை திட்டமிட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நெல்லை சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி பல்வேறு இடங்களில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உடன் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நெல்லை சந்திப்பு பகுதிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து ஒரு தரப்பினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், அங்கு கருப்புக்கொடி காட்டியவர்கள் மீது அதிமுகவின் ஆதரவாளர்கள் கற்களை வீசியதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கண்டனம் முழக்கம் மிட்டதால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரை தடுத்து நிறுத்த முயன்றபோது போலீசார் மற்றும் அதிமுக ஆதரவாளர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தொடர் சம்பவத்தால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.