பா.ஜ.க கட்சியின் தேசிய தலைவராக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது பதிவிக்காலம், அதிகாரப்பூர்வமாக 2023இல் முடிவடைந்தது. ஆனால், கடந்தாண்டு மக்களவைத் தேர்தலின் போது கட்சியை வழிநடத்துவதற்காக அவரது பதவிக்காலத்தை ஜூன் 2024 வரை பா.ஜ.க நீட்டித்தது.

பா.ஜ.கவின் விதிகள்படி, தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, நாட்டில் உள்ள மாநிலங்களில் குறைந்தது 19 மாநிலங்களில் அதன் மாநிலத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்படி புதுச்சேரி, மிசோரம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் பா.ஜ.க கவனம் செலுத்தி வருகிறது. அதனால், ஜே.பி நட்டா பதவிக்காலம் ஜூன் 2024 முடிந்து ஒரு வருடம் ஆகியும், பா.ஜ.கவின் அடுத்த தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில், புதிய தேசியத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக ஆலோசனை பா.ஜ.கவுக்குள் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அடுத்த தேசியத் தலைவராக ஒரு பெண்ணை நியமிக்க பா.ஜ.க திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆந்திரப் பிரதேச பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் புரந்தேஸ்வரி மற்றும் பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் ஆகியோர் முன்னணியில் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க வெற்றி பெறுவதில் பெண் வாக்காளர்கள் முக்கிய வங்கு வகித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒரு பெண்ணை கட்சியின் தேசியத் தலைவர் பதவியில் அமர்த்த பா.ஜ.க திட்டமிட்டு வருகிறது. இந்த நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அளித்தால், ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் மூன்று நாள் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.