மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, நவிமும்பை, புனே, நாக்பூர், தானே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு கடந்த 15ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி 2,869 கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்கப்படும் இந்த தேர்தலில் போட்டியிட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, சுயேட்சை என 15,931 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

Advertisment

கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற தீவிர தேர்தல் பிரச்சாரம் கடந்த 13ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், 29 மாநகராட்சிகளுக்கு கடந்த 15ஆம் தேதியன்று காலை 7:30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 5:30 மணி வரை நடைபெற்றது. அதன்படி காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்றபடி ஆர்வமாக வாக்களித்தனர்.

Advertisment

இந்த நிலையில், 29 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு நேற்று (16-01-26) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 29 மாநகராட்சிகளில் உள்ள 2869 கவுன்சிலர் இடங்களில் ஆளும் மகாயுதி கூட்டணியான பா.ஜ.க - ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா - அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக பா.ஜ.க 1372 இடங்களில், ஷிண்டேவின் சிவசேனா 394 இடங்களிலும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 158 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. எதிர்கட்சியான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 315 இடங்கள், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 149 இடங்கள், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 28 இடங்கள் பிடித்து மாநகராட்சி தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது.

இதில் குறிப்பாக, 28 ஆண்டுகளாக ஒருங்கிணைந்த சிவசேனாவில் கட்டுப்பாட்டில் இருந்த மும்பை மாநகராட்சியை ஆளும் மகாயுதி கூட்டணி கைப்பற்றியுள்ளது. மும்பை மாநகராட்சியில், மொத்தம் 227 கவுன்சிலர் இடங்களில், பா.ஜ.க 89 இடங்களிலும், ஷிண்டேவின் சிவசேனா 29 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதே போல் எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி கூட்டணியில், காங்கிரஸ் 24 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 65 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 

Advertisment