BJP strongly opposes in Parliament for Controversial slogan against Prime Minister Modi
கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல், மகாராஷ்டிரா தேர்தல் மற்றும் ஹரியானா தேர்தல், 2023இல் நடந்த கர்நாடகா தேர்தல் ஆகிய தேர்தல்களில் பா.ஜ.கவுக்காக ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையமும், பா.ஜ.க தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், வாக்குத் திருட்டு குறித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் கடந்த 14ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காங்கிரச் தொண்டர்கள் சிலர், பிரதமர் நரேந்திர மோடியை குறித்து கோஷங்களை எழுப்பினர். அதில், ‘மோடி, உன் கல்லறை இன்று இல்லையென்றால் நாளை தோண்டப்படும்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் முழக்கமிட்டதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் முழக்கமிட்டதால் பா.ஜ.கவினர், காங்கிரஸுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் தலைமை இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரம் பாராளுமன்றம் வரை எதிரொலித்துள்ளது. கடந்த 1ஆம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் முழக்கமிட்டது தொடர்பாக பா.ஜ.க எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக காங்கிரஸ் தலைமை மன்னிப்பு கேட்க வேண்டும் என இரு அவைகளிலும் பா.ஜ.க எம்.பிக்கள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளதாவது, “நாம் அரசியல் எதிரிகள் தான், எதிரிகள் அல்ல. காங்கிரஸ் தொண்டர்கள் கட்சி பேரணியில் பிரதமரின் கல்லறையைத் தோண்டுவதாக மிரட்டியுள்ளனர். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம்” என்று தெரிவித்தார்.
Follow Us