பா.ஜ.க. வின் அச்சாணி பலம், பலவீனங்களை அறிந்த எடப்பாடி பழனிசாமி சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசாமல், கூட்டணி என்றாலும் அ.தி.மு.க.வின் ஆட்சிதான் என்றும் எனது தலைமையில் தான் அமைச்சரவை அமையும் என்றும் ஆட்சியில் பங்கு கிடையாது என்றும் வெளிப்படையாகவே பேசி வருகிறார். தொகுதி வாரியாக பிரச்சாரம் செய்து வரும் எடப்பாடி நெல்லை வந்தபோது, அவருக்கு பெருமாள்புரத்திலிருக்கும் தனது பங்களாவில் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் விருந்தளித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியிடம் தேர்தல் மற்றும் தொகுதி பங்கீடு பற்றியவைகள் குறித்து நயினார் நாகேந்திரன் பேசியபோது பிடிகொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது நயினார் நாகேந்திரனை உறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. 

Advertisment

இதுகுறித்து பா.ஜ.க.வின் அந்த முக்கியப் புள்ளி விரிவாகவே நம்மிடம் பேசினார். “அரசியலில் எடப்பாடி பழனிசாமியை விட சீனியர் நயினார் நாகேந்திரன் அரசியல்வித்தைகளை பழுதின்றிக் கற்றவர். எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாட்டிற்கு பதிலடி தரும் வகையில் பா.ஜ.க. தரப்பில் பெரும் கூட்டத்தைக் கூட்டி தங்களது இருப்பை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற முடிவில்தான் அப்போது ஆகஸ்ட் 17 அன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி, விருதுநகர் உள்ளிட்ட 5 எம்.பி. தொகுதிகளில் அடங்கி உள்ள சட்டமன்றங்களில் பூத் கமிட்டி உறுப்பினர்களின் மண்டல மாநாடு மற்றும் ஆய்வுக் கூட்டம் நெல்லையில் நடைபெறும் என்று அறிவித்த நயினார் நாகேந்திரன், அந்த கூட்டத்தில் பா.ஜ.க.வின் தலைவர்கள் யார் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கவில்லை.

அன்றைய தினம் பா.ஜ.க.வின் முக்கியத் தலைவரும் நாகாலாந்து கவர்னருமான இல.கணேசன் காலமானதால் நெல்லை மண்டல மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், பா.ஜ.க.வின் கூட்டணிக்கு மங்களம் பாடிவிட்டு வெளியேறிய ஒ.பி.எஸ்ஸின் மரியாதை, அரசியல் மட்டத்திலும் அவர் சமூகம் சார்ந்த மக்களிடமும் உயர்ந்திருக்கிறது. தென்மாவட்டத்தின் முக்குலத்தோர் சமூகம் அதிக அளவில் இருப்பதால் அவர்களின் ஆதரவை ஒ.பி.எஸ். மேக்சிமம் ஸ்கோர் செய்துவிடுவார். நயினார் நாகேந்திரனால் அந்த அளவிற்கு எட்ட முடியாத சூழல். எனவே இதனை திசை திருப்புவதன் மூலம் மண்டல பூத் கமிட்டி உறுப்பினர்கள் மாநாட்டை தன்னால் பெரிய அளவில் நடத்தி சாதித்துக் காட்ட முடியும் என்பதையும் இதன்மூலம் பா.ஜ.க. தன் வசம் இருப்பதையும் வெளிப்படுத்திக்கொள்ள சாதாரண பூத் கமிட்டி மாநாட்டிற்கு சக்திவாய்ந்த அமைச்சர் அமித்ஷாவை வரவழைத்தால்தான் தன் சமூகம் சார்ந்தவர்களிடம் தன் செல்வாக்கு உயரும். கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.விடம் தொகுதி பங்கீடு பற்றி தெம்பாகவே பேச முடியும் என்ற பிம்பத்தை வெளிப்படுத்தவே இந்த ஏற்பாடுகள், அதன் வெளிப்பாடே ஆகஸ்ட் 22 அன்று நெல்லையில் பா.ஜ.க.வின் மண்டல பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆய்வுக் கூட்டம். அதில் அமைச்சர் அமித்ஷா கலந்துகொள்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது என்கிறார்கள்.

booth

Advertisment

முன்னதாக தமிழக பா.ஜ.க.வின் தலைமை, கட்சியின் நிர்வாகிகளால் வழங்கப்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்களின் அறிக்கையை ஆய்வு செய்வதற்காக ஒரு மாவட்டத்தின் அறிக்கையை அடுத்த மாவட்டத்தின் நிர்வாகிகள் ஆய்வு செய்யும் வகையிலான கமிட்டியை அமைத்தது. அப்படியான ஆய்வை அந்த மாவட்ட கமிட்டி நடத்தியதில் பூத் ஒன்றிற்கு 10+1 என்ற அளவிலான பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்காமல் ஒவ்வொரு பூத்திலும் இரண்டு பேர்களே உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதைக் கண்டறிந்திருக்கிறார்கள். மேலும் இந்த ஆய்வின் மூலம் தமிழகம் அளவில் பா.ஜ.க.விற்கு 70 சதவிகிதம் பூத் கமிட்டிகள் அமைக்கப்படவில்லை. நிர்வாகிகள், அந்த வகையில் பூசி மொழுகியிருக்கிறார்கள். அரசியல் கட்சிகளுக்கு ஆணிவேறே பூத் கமிட்டி தான். பா.ஜ.க.விற்கு அவைகள் முழுமையாக அமைக்கப்படவில்லை என்றும் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்தே தற்போது தமிழக பா.ஜ.க.வின் நிர்வாகிகளின் தரப்பில் 10 பேர்கள் அடங்கிய பூத் கமிட்டி உறுப்பினர்களின் பட்டியல்கள் தலைமைக்கு தரப்பட்டுள்ளன. அதில் கூட முறையாக உறுப்பினர்களை நியமிக்காமல் தனக்கு வேண்டியவர்களின் பெயர்கள், மூளைக்கு எட்டியவர்களின் பெயர்களைச் சேர்த்து பூத் ஒன்றிற்கு 10 உறுப்பினர்களை நியமித்ததாக நிர்வாகிகள் மறு அறிக்கையை அளித்திருக்கிறார்கள். இந்த விவரம் .நயினார் நாகேந்திரனுக்கும் தெரியும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் நெல்லையில் பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் அமித்ஷா ஆய்வுக் கமிட்டியில் கலந்து கொள்கிறார் என ஏற்பாடு செய்யப்பட்டது. பூத் கமிட்டி உறுப்பினர்கள் என்ற வகையில் தற்போது நடத்தப்படுகிற 5 எம்.பி. தொகுதிகளின் மண்டல மாநாட்டில் 30 சட்டமன்றங்கள் அடங்கியுள்ளன. 30 சட்டமன்றங்களும் 8,500 வாக்குச்சாவடிகளைக் கொண்டது. இந்த மொத்த வாக்குச் சாவடிகளுக்கும் தலா 10 உறுப்பினர்கள் வீதம் 85,000 பூத் கமிட்டி உறுப்பினர்கள் அமைக்கப்படவேண்டும். மண்டல பூத் கமிட்டி ஆய்வு என்று வரும்போது இந்த 5 பாராளுமன்ற தொகுதி மொத்த வாக்குச் சாவடிகளின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரையும் அமைச்சரின் கூட்டத்திற்கு அழைத்து வந்திருக்கப்படவேண்டும். மேற்படி தொகுதிகளில் முறையான பூத் கமிட்டி உறுப்பினர்கள் அமைக்கப்படாமல் போனதால் நிலைமையை சமாளிக்க வேன் செலவு தலைக்கு 200 என்ற வகையில் அந்தந்தப் பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்துக் கொண்டு வந்து பூத் கமிட்டி உறுப்பினர்கள் என்று காட்டப்பட்டிருக்கிறது. இந்த வகையில் அ.தி.மு.க.வினரும் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

booth1

Advertisment

அமைக்கப்பட்ட முறையான பூத் கமிட்டி உறுப்பினர்கள் என்றால் தோராயமாகப் பார்த்தாலும் 40,000 என பாதியளவிலான உறுப்பினர்களாவது வந்திருக்கவேண்டும். அந்த அளவுகூட கிடையாது. இந்தக் கூட்டத்திற்கு லட்சம் பேர் வருவார்கள் என்று பா.ஜ.க. தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் அரங்கில் போடப்பட்டதோ மொத்தம் 14,000 சேர்கள் தான். அதிலும் கூட சிலவைகள் காலியாக இருக்க 13500 சேர்கள் தான் நிரம்பியுள்ளன. பூத் கமிட்டி என்ற பெயரில் நிர்வாகிகள் ஒப்பேற்றி கதையை முடித்திருக்கிறார்கள்” என்றார் அந்த நிர்வாகி.

மதியம் தூத்துக்குடி விமான நிலையம் வந்த அமைச்சர் அமித்ஷா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக நெல்லை ஆயுதப்படை மைதானம் வந்தவர் நேராக மாலை 4.10 மணியளவில் ஆய்வுக் கூட்ட அரங்கிற்கு வந்தார். மேடையில் அவரை, பா.ஜ.க.வின் மாஜி மாநிலத் தலைவர், தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், நாகர்கோவில் பா.ஜ.க எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி, சரத்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

bootham

ஆய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர் அமித்ஷா, “டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையிலிருந்தபடியே அரசை இயக்கினார். அவர் குற்றச்சாட்டிற்கு உள்ளான போதே பதவி விலகியிருக்க வேண்டும். அவரது செயல்பாடே எங்களை இந்த மசோதா இயற்றுமளவிற்கு தள்ளியுள்ளது. அந்த மசோதாவை, கருப்பு சட்டமென்ற கூற முதலமைச்சருக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று கூறினார். மேலும் பா.ஜ.க, தமிழகத்தின் மீது அதிக பற்றுதல் பாசமும் கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்ட வாக்கு அரசியலைக் கையிலெடுத்த அமித்ஷா, “அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கியது பா.ஜ.க. ஆட்சியில்தான். இந்த மண்ணின் சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாகப் போகிறார். அதற்கு பிரதமர் மோடி, நட்டாவிற்கு நன்றி. திருக்குறளை 13க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து அணி சேர்த்துள்ளார் பிரதமர் மோடி. நல்ல மன்னன் அருமையான சேனையுள்ளவனாக விளங்கவேண்டும். திருக்குறள் போல் ஆட்சி நடத்துகிறார் மோடி. தமிழகத்தில் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியின் ஆட்சி அமையவுள்ளது. கடந்த தேர்தலில் பா.ஜ.க. 18 சதவிகிதமும் அ.தி.மு.க. 21 சதவிகிதம் என்றளவில் வாக்குகளை வாங்கியது. இரண்டும் இணைந்தால் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று அழுத்தமாகவே பேசினார்.

கூட்டம் முடிந்து கிளம்பிய அமித்ஷா திட்டப்படி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் இல்லத்தில் நடக்கவிருந்த தேநீர் விருந்திற்காக கிளம்பினார். பூத் கமிட்டி மண்டல மாநாடு என்ற வகையில் அமைச்சர் அமித்ஷாவிற்கு சீன் காட்டியிருக்கிறது தமிழக பா.ஜ.க.