ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும் எதிர்ப்பும் கிளம்பியது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பிரிவு 370 ரத்து செய்தது செல்லும் என தீர்ப்பளித்தது.

Advertisment

இதையடுத்து, கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட முதல் சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதன்படி, அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கக்கூடிய உமர் அப்துல்லா முதல்வராக பதவி வகித்து வருகிறார். இருப்பினும், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்.

இந்த நிலையில், யூனியன் பிரதேசமாக இருக்கும் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சிலர் கடந்த 1 மாதத்திற்கு மேலாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். லடாக்குக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் வளர்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இருவர்களது உடல்நிலை மோசமாகி நேற்று (23-09-25) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக லே நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகம் முன்பு போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் பா.ஜ.க அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு பா.ஜ.க அலுவலகம் மீது கற்களை வீசியும் அலுவலகத்திற்கு தீயையும் வைத்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியும், பா.ஜ.க அலுவலகத்திற்கு தீ வைத்தவர்களை அங்கிருந்து போலீசார் விரட்டியுள்ளனர். இருப்பினும் லடாக் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் லடாக் யூனியன் பிரதேசம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் லடாக் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.