விண்வெளியில் முதலில் பயணித்தது ஆம்ஸ்ட்ரங் அல்ல அனுமன் என்று முன்னாள் பா.ஜ.க மத்திய அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர் தற்போது ஹமீர்பூர் மக்களவைத் தொகுதியின் எம்.பியாக பதவி வகித்து வருகிறார். தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிஎம் ஸ்ரீ பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க எம்.பி அனுராக் தாக்கூர் கலந்து கொண்டார். அதில் மாணவர்களிடம் அவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் மாணவர்களிடம், ‘உலகின் முதல் விண்வெளிப் பயணி யார்?’ எனக் கேள்வி கேட்டார். அதற்கு மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து, ‘நீல் ஆம்ஸ்ட்ராங்’ எனப் பதிலளித்தனர். அப்போது அனுராக் தாக்கூர், “அது ஹனுமான் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார். மேலும் அவர், “நாம் இன்னும் நிகழ்காலத்தில் நம்மைப் பார்க்கிறோம். நமது ஆயிரக்கணக்கான ஆண்டுகால பாரம்பரியம், அறிவு, கலாச்சாரம் ஆகியவற்றை நாம் அறியாத வரை, ஆங்கிலேயர்கள் நமக்குக் காட்டியது போலவே நாம் இருப்போம். எனவே, பாடப்புத்தகங்களிலிருந்து சிந்தித்து, நமது தேசம், நமது மரபுகள், நமது அறிவைப் பாருங்கள் என்று பள்ளி முதல்வரையும் உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அதை அந்த திசையில் இருந்து பார்த்தால், நீங்கள் பார்க்க நிறைய விஷயங்களைக் காண்பீர்கள்” என்று கூறினார். பா.ஜ.க எம்.பி அனுராக் தாக்கூரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.