BJP MP's controversial speech to If you are not married, say Jai Shri Ram
திருமணம் ஆகவில்லை என்றால் ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள் என பா.ஜ.க எம்.பி ஒருவர் நாடாளுமன்றத்தில் பேசியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாத்மா காந்தி பெயரில் உள்ள மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என்ற பெயரில் புதிய திட்டத்தை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு கடந்த 16ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பை கொடுக்க திட்டமிட்டிருந்தாலும், 60 சதவீத நிதியை மத்திய அரசும், 40 சதவீத மாநில அரசும் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது. மேலும், மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்திற்குப் பதிலாக விபி ஜி ராம் ஜி என்ற பெயரில் திட்டத்தை மாற்றியமைத்ததால் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த மசோதா தொடர்பாக கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற மக்களவையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பிக்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் 98 மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்று பேசிய நிலையில், நேற்று குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகள் கிடைத்ததால் அந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதன் மூலம், 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டு விபி-ஜி ராம் ஜி என்ற பெயரில் இந்த திட்டம் செயல்பட இருக்கிறது.
இந்த நிலையில், இந்த விபி- ஜி ராம் ஜி மசோதா தொடர்பாக உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க எம்.பி அஜய் பட் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் பேசியதாவது, “ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கவில்லை என்றால், வேலை கிடைக்கவில்லை என்றால், வீட்டில் சண்டைகள் இருந்தால், கணவன் மனைவி ஒத்துப்போகவில்லை என்றால், ஒரு மகன் வழிதவறிச் சென்றிருந்தால், அல்லது ஒரு பசு பால் கறக்கவில்லை என்றால் கூட, ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லுங்கள். எல்லாம் சரியாகிவிடும். இந்த நோக்கத்தில் என்ன தவறு இருக்கிறது?” என்று கூறினார்.
இவரது பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களை பெற்றுள்ளது. அறிவியல் ரீதியாகவும், சமூக அடிப்படையிலும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளுக்கு இதுபோன்ற ஆன்மீக தீர்வுகளை முன்வைப்பது தவறான அணுகுமுறை என எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Follow Us