கர்நாடகாவில் கடந்த 2015இல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் ரூ.162 கோடி செலவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பலதரப்பட்ட மக்களின் சமூகம், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட விவரங்கள் திரட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அப்போது இருந்த சித்தராமையா தலைமையிலான அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் அந்த அரசாணைக்கு கர்நாடகாவில் இரு பெரும் சமூகங்களான ஒக்கலிகா, லிங்காயத்து ஆகிய சமூகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதனால், கணக்கெடுப்பு தொடர்பான விவரங்கள் வெளியிடப்படாமல் இருந்தது. அதனை தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், சித்தராமையாவின் ஆட்சி முடியும் தருவாயில் இருந்ததால் அது தொடர்பான அறிக்கையையும் வெளியிடப்படவில்லை.
இந்த சூழ்நிலையில், மாநில பிற்படுத்தப்பட்டோ ஆணையர் தலைமையில் சமூக, பொருளாதார, கல்வி அடிப்படையில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் சித்தராமையா கடந்த மாதம் அறிவித்தார். மேலும், கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அக்டோபர் 7ஆம் தேதி வரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அந்த பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. ஆனால், குறிப்பிட்ட காலத்திற்கு இப்பணி முழுமையாக நடத்த முடியாததால் அக்டோபர் 18ஆம் தேதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், பா.ஜ.க மாநிலங்களவை எம்.பியுமான சுதா மூர்த்தி சாதிவாரி கணக்கெடுப்பில் பங்கெடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். பெங்களூருவில் வசிக்கும் நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தி ஆகியோர், ‘நாங்கள் எந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல. எனவே, அத்தகைய குழுக்களுக்காக அரசாங்கம் நடத்தும் கணக்கெடுப்பில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்’ என அரசிடம் எழுதிக் கொடுத்துள்ளனர்.
அவர்கள் இருவரது கடிதத்தை கர்நாடகா அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. இது குறித்து மாநில தொழிலாளர்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது, “கர்நாடகா அரசின் சாதிவாரி கணக்கெடுப்பில் சுதா மூர்த்தி பங்கேற்காதது அவரது தனிப்பட்ட விருப்பம். ஒரு அரசாங்கம், இதில் பங்கேற்க யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. அவருடைய நிலைப்பாட்டை நான் மதிக்கிறேன். ஆனால், மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் போதும் அவர் இதையே சொல்ல வேண்டும் என்று நான் நம்புகிறேன். இது மிகவும் விவாதத்திற்குரியது. இது சமூகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார். மாநில அரசு நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பில் பா.ஜ.க எம்.பி ஒருவர் தனது குடும்பத்துடன் பங்கேற்ப மறுத்திருப்பது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.