உத்தரபிரதேசம் மாநிலம் பர்ருகாபாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த முகேஷ் ராஜ்புத். இவரது சகோதரி ரீனா சிங். இவருக்கும் பர்ருகாபாத் தொகுதியைச் சேர்ந்த லக்ஷ்மண் சிங் என்பவரின் மகனுக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ரீனா சிங்கிற்கும் அவரது மாமனார் லக்ஷ்மண் சிங்கிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
இந்தச் சூழலில் செப்டம்பர் 7 ஆம் தேதி அன்று பட்டப்பகலில் லக்ஷ்மண் சிங், அவரது மருமகளான ரீனாவை நடுரோட்டில் வைத்து கட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும் அவரது மைத்துனர்களான ராஜேஷ் மற்றும் கிரிஷ் ஆகியோரும் ரீனாவைக் கடுமையாகத் தாக்குகின்றனர். அதில் ஒரு மைத்துனர் ரீனாவின் தலைமுடியைப் பிடித்து கீழே இழுத்துத் தள்ளி தாக்க முயன்றுள்ளார். அப்போது இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஓருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தபோது, திடீரென சொல்போனை பிடிங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து ரீனா காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். அந்தப் புகாரில், “சம்பவத்தன்று மதியம் நான் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனது மாமனார் லக்ஷ்மண் சிங் மற்றும் மைத்துனர் கிரிஷ் இருவரும் நான் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுக்க முயன்றனர். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நான், அவர்களிடம் இது குறித்து கேட்டேன். அப்போது அவர்கள் என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். மேலும் மாமனார் லக்ஷ்மண் சிங், அவருடைய உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து வந்து, ‘உன்னை கொல்லாமல் விடமாட்டேன்’ என்று மிரட்டினார். பின்னர் அங்கிருந்து நான் வெளியே ஓடிவந்தேன். அப்போது நடுரோடு என்றும் பார்க்காமல் மாமனார் என்னை கட்டையால் கடுமையாகத் தாக்கினார். மேலும் மைத்துனர்கள் கிரிஷ் மற்றும் ராஜேஷ் இருவரும் என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டி அடித்தனர்” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மாமனார் லக்ஷ்மண் சிங் மற்றும் ஒரு மைத்துனரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் மற்றொரு மைத்துனரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சம்பவம் குறித்து பேசிய ரீனா, “எனக்கு இரு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் என்னை அவர்கள் அடிக்கடி அடித்து துன்புறுத்தி வருகின்றனர். ஏதாவது செய்து என்னை இந்த வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டு, வேறு ஒரு பெண்ணைப் பார்த்து அவரது மகனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று மாமனார் லக்ஷ்மண் சிங் நினைக்கிறார்” என்று கதறி அழுதுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள பாஜக எம்.பி. முகேஷ் ராஜ்புத், எனது சகோதரி குளிக்கும்போது அவர்கள் வீடியோ எடுக்க முயன்றுள்ளனர். அதனை அவர் எதிர்த்தபோது நடுரோடு என்று கூட பார்க்காமல் தாக்கியுள்ளனர். முதலில் காவல்துறையினரின் நடவடிக்கை தாமதமானதால், டிஜிபியின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். அதன்பிறகுதான் தற்போது கைது நடவடிக்கை நடந்திருப்பதாகத் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய காவல் அதிகாரி, “ரீனாவின் புகாரின்படி லக்ஷ்மண் சிங், ராஜேஷ், கிரிஷ் ஆகிய மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரை கைது செய்துள்ளோம். தலைமறைவாக இருக்கும் ஒருவரை தீவிரமாகத் தேடி வருகிறோம். ரீனா தற்போது மருத்துவ சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
பட்டப்பகலில் நடுரோட்டில் பாஜக எம்.பி.யின் சகோதரியை அவரது மாமனார் கொடூரமாகத் தாக்கும் சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.