பாஜக தலைமையிலான மகாராஷ்டிரா அரசு தொடக்கப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்கும் உத்தரவுகளை திரும்பப் பெற்றதைக் கொண்டாடும் வகையில், கடந்த 5ஆம் தேதி வெற்க் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 20 வருடங்களுக்கு முன்பு பிரிந்த சகோதரர்களான உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் ஒன்றிணைந்து கலந்து கொண்டனர். அவர்கள் இருவரும், ஒரே மேடையில் கட்டியணைத்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்.
இதில் பேசிய ராஜ் தாக்கரே, “ஒரு குஜராத்தியாக இருந்தாலும் சரி, இங்குள்ள வேறு யாராக இருந்தாலும் சரி, மராத்தி தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதற்காக மராத்தி பேசத் தெரியாதவர்களை அடிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் மராத்தி தெரியாது என்று யாராவது நாடகம் ஆடினால், அவர்களின் காதுகளுக்குக் கீழே அடிக்க வேண்டும். நீங்கள் ஒருவரை அடித்தால், அந்த சம்பவத்தை வீடியோ எடுக்காதீர்கள். அடிக்கப்பட்ட நபர் தான் அடிக்கப்பட்டதாகச் சொல்லட்டும்; எல்லோரிடமும் சொல்லத் தேவையில்லை” என்று கூறினார். கடந்த ஜூன் 28ஆம் தேதி மராத்தி பேசாததால் இனிப்புக் கடைக்காரர் ஒருவரை நவநிர்மாண் சேனா கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள மக்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்யுங்கள் என ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோருக்கு பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே சவால் விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நிஷிகாந்த் துபே, “நீங்கள் எங்கள் பணத்தில் பிழைக்கிறீர்கள். உங்களுக்கு என்ன மாதிரியான தொழில்கள் உள்ளன? இந்தி பேசுபவர்களை அடிக்கும் அளவுக்கு உங்களுக்கு தைரியம் இருந்தால், உருது, தமிழ் மற்றும் தெலுங்கு பேசுபவர்கள் மீதும் நீங்கள் அடிக்க வேண்டும். நீங்கள் பெரிய முதலாளி என்றால், மகாராஷ்டிராவை விட்டு வெளியேறுங்கள். பீகார், உத்தரப் பிரதேசம் அல்லது தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு வாருங்கள். அங்குள்ள மக்கள் உங்களை அடித்துவிடுவார்கள்.
இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய மராத்தி மக்கள் மகாராஷ்டிரா மக்களை நாங்கள அனைவரும் மதிக்கிறோம். மும்பை நகராட்சித் தேர்தல் நெருங்கி வருகிறது. அதனால், ராஜ் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் மலிவான அரசியல் செய்கின்றனர். அவர்களுக்கு தைரியம் இருந்தால், அவர்கள் மாஹிமுக்கு சென்று மாஹிம் தர்ஹா முன்பு இந்தி அல்லது உருது பேசுபவர்களை அடிக்க வேண்டும்” என்று சவால் விடுத்தார்.