மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக டார்ஜிலிங், காலிம்போங், ஜல்பாய்குரி, அலிபுர்துவார், ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 4, 5 தேதிகளில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. 12 மணி நேரத்தில் 300 மி.மீ.க்கும் மேல் மழை பெய்ததால் டீஸ்டா, சங்கோஷ் போன்ற ஆறுகள் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால், பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் குறைந்தபட்சம் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

மிரிக், ஜோர்புங்லோ, மானேபஞ்சாங்  போன்ற இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தையும், சிக்கிமையும் இணைக்கும் சாலைகள் மற்றும் டார்ஜிலிங்-சிலிகுரியை இணைக்கும் முக்கிய வழித்தடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், இந்தப் பகுதிகளுக்கான இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. முதல்வர் மம்தா தலைமையிலான அரசு மீட்பு பணியை முடுக்கியுள்ளது. அக்டோபர் 12 தேதி வரை மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால், மாநில அரசு 24/7 கட்டுப்பாட்டு அறையை அமைத்து மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது.

Advertisment

Untitled-1

இதனிடையே, 6-ஆம் தேதி பாஜக எம்.பி. கஹென் முர்மு மற்றும் எம்எல்ஏ சங்கர் கோஷ் ஆகியோர் ஜல்பாய்குரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டனர். பின்னர், அவர்கள் பொதுமக்களையும் சந்தித்து வெள்ளப் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது அங்கிருந்த சிலர் பாஜக எம்.பிக்கு எதிராக முழக்கமிட்டு நெருங்கி வந்தனர். பின்னர், அதிலும் சிலர் கும்பலாக சேர்ந்துக் கொண்டு பாஜக எம்.பியின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். நிலையின் தீவிரத்தை உணர்ந்த பாஜக எம்.பி., காரில் ஏற முயன்றார். ஆனால், காரை சுற்றி வளைத்த அந்தக் கும்பல் கண்ணாடிகளை உடைத்து, பாஜக எம்.பி. மீது கொடூர தாக்குதல் நடத்தினர். அதில் அவருக்கு தலை உள்ளிட்ட பல பகுதிகளில் ரத்தம் சொட்டி காரில் ஏறி உயிர் தப்பினார். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால், பின்னர் அங்கிருந்த பாதுகாவலர்கள் பாஜக எம்.பி. கஹென் முர்மு மற்றும் எம்.எல்.ஏ. சங்கர் கோஷ் இருவரையும் அங்கிருந்து பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். வெள்ளப் பாதிப்பைப் பார்வையிட சென்ற எம்.பி. மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள பாஜக, மேற்கு வங்கத்தில் காட்டாட்சி நடப்பதாக விமர்சித்துள்ளது. மேலும், பாஜகவினருக்கு எதிராக தங்களது கட்சித் தொண்டர்களைத் தூண்டிவிட்டு முதல்வர் மம்தா வன்முறையை அரங்கேற்றி வருகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

ஆனால், அடிப்படை ஆதாரமில்லாமல் தங்களது மீது பாஜக குற்றம் சுமத்துவதாகக் கூறியுள்ள திரிணாமுல் காங்கிரஸ், பாஜக எம்.பிக்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வந்ததால், மக்கள் கோபத்தில் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை அமைத்து மாநில அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.