ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை பா.ஜ.க எம்.எல்.ஏ தாக்கிய சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மகாராஷ்டிரா மாநிலம் காட்கோபர் தொகுதியின் பா.ஜ.க சார்பில் பராக் ஷா என்பவர் எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்து வருகிறார். இவர், தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சில போக்குவரத்து விதி கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் சட்டவிரோத நடைபாதையில் வியாபாரிகளுக்கு எதிராகவும் நேற்று முன்தினம் (20-12-25) மகாத்மா காந்தி சாலையில் போராட்டம் நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பா.ஜ.கவினர் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்த போராட்டத்தின் போது, அந்த சாலையில் ஒருவழி பாதையில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் வந்து கொண்டிருந்தார். இதனை கண்ட போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர், அந்த ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து கொண்டிருந்ததை பார்த்த பா.ஜ.க எம்.எல்.ஏ பராக் ஷா, அங்கு வந்து அந்த ஆட்டோ ஓட்டுநரின் கன்னத்தில் அடித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து பராக் ஷாவை எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோர் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் தனது எக்ஸ் பக்கத்தில், ‘பாஜக எம்எல்ஏக்கள் மிகவும் திமிர்பிடித்தவர்களாக மாறிவிட்டனர். ஏழை ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுனர்களைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. காட்கோபரில் பாஜக எம்எல்ஏ பராக் ஷா இன்று ஒரு ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரை போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அடித்தார். . பாஜக எம்எல்ஏக்கள் தாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைப்பதால் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்கிறார்கள். இப்போது அவர்கள் தெருச் சண்டைகளிலும் ஈடுபடுகிறார்கள். இதுதான் பாஜகவின் உண்மையான முகம். பெரிய தொழிலதிபர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு பாஜக சிவப்புக் கம்பளம் விரித்து, ஏழைகளையும் தொழிலாள வர்க்கத்தையும் அடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது” என்று தெரிவித்தார். 

Advertisment