கடந்த 2017இல் நிகழ்ந்த உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக்கோரி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், அவரது தாயார் மற்றும் சமூக ஆர்வலர் யோகிதா பயானா ஆகியோர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 11:30 மணியளவில், காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று, போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி,  போலீஸ் வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். 

Advertisment

இந்த சம்பவத்தின் போது காவல் துறை அவர்களிடம் அத்துமீறியதாகவும் கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் அந்தச் சம்பவம் குறித்துப் பேசிய காணொளி ஒன்றை யோகிதா பயானா வெளியிட்டார். அதில், சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்களை ஒரு வாகனத்தில் அமரச் செய்ததாகவும், உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரிலேயே செயல்படுவதாகவும் அவர்கள் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார். தனது தாயார் வாகனத்திலிருந்து தள்ளிவிடப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். தங்களை வழக்கறிஞரைச் சந்திக்க அனுமதிக்க விடாமல் தடுத்ததாகவும் கூறினார். பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் பேசுகையில், பாலியல் குற்ற வழக்கில் வழங்கப்பட்ட இந்த ஜாமீன்  எங்களுக்கு 'மரணம்' நிகழ்ந்ததைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துவதாகக் கூறினார்.   

Advertisment

நீதிபதி ஜாமீன் வழங்கிவிட்டு சென்றுவிட்டார். ஆனால், தனது கணவர் கொல்லப்பட்டதாகவும், மருமகனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், மைத்துனர் சிறையில் இருப்பதாகவும் அவர் கூறினார். தங்கள் குடும்பம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் கூறினார். மேலும்,  ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் கூறினார். நீதிமன்றம் குல்தீப் சிங் செங்காருக்கு நான்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கிய நிலையிலும்,  செங்கார் இப்போதைக்கு சிறையிலேயே இருப்பார் என்று கூறப்படுகிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் தந்தையின் கொலைத் தொடர்பான மற்றொரு வழக்கில் அவர் ஏற்கனவே 10 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். 

அந்த வழக்கில் அவரது ஜாமீன் குறித்து நீதிமன்றம் டிசம்பர் 28 அன்று முடிவு செய்யும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச அமைச்சர் ஓ.பி. ராஜ்பர் பாதிக்கப்பட்ட பெண் நடத்திய போராட்டத்தை கேலி செய்தார். மேலும் நீதிமன்றம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திலிருந்து செங்கர் குறைந்தது 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும் கிண்டல் செய்யும் தொனியில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment