BJP MLA falls while taking reels at Controversial Yamuna water issue
தலைநகர் டெல்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 10 வருடமாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்து பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு, ஆம் ஆத்மி டெல்லிக்கு எதுவும் செய்யவில்லை எனவும் அதனை பா.ஜ.க தலைமையிலான டெல்லி அரசு சரி செய்ய போவதாகவும் முதல்வர் ரேகா குப்தா தொடர்ந்து கூறி வந்தார். அதன்படி, ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லியின் முக்கிய நதியாக இருக்கும் 52 கி.மீ பாயும் யமுனை நதி சுத்திகரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முதல்வர் ரேகா குப்தா கூறி வந்தார்.
இந்த சூழ்நிலையில், கடந்த 25ஆம் தேதி முதல் இன்று (28-10-25) டெல்லியில் சத் பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பெரும்பகுதியாக இருக்கும் பூர்வாஞ்சல் பகுதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் சத் பூஜையைம் யமுனை நதியில் கொண்டாடுவது வழக்கம். தீபாவளி பண்டிகை முடிந்து 6 நாட்கள் கழித்து மூன்று நாட்கள் விரதம் இருக்கும் பெண்கள், யமுனை நதியில் பூஜை செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர். யமுனை நதியில் நிறைந்திருக்கும் கழிவுகள், அழுக்குடன் நிறைந்த நுரைகளுடன் கூடிய தண்ணீரில் நின்றவாறு பெண்கள் பூஜை செய்து வருகின்றனர்.
அதனை போக்கும் விதமாக, இந்தாண்டு கொண்டாடப்படும் சத் பூஜைக்காக யமுனை நதியை சுத்திகரிக்கும் பணியை முதல்வர் ரேகா குப்தா சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். அதன்படி, யமுனை நதியில் சுத்திகரிப்பு பணி விரைவாக நடைபெற்று நிறைவுபெற்றதாகக் கூறப்படுகிறது. ரேகா குப்தாவின் இந்த நடவடிக்கைக்காக பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர். ஆனாலும், இந்த சுத்திகரிப்பு பணி இன்னும் நிறைபெறவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. இந்த சூழலில், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி பிரிவுத் தலைவர் சவுரப் பரத்வாஜ் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியினர் சேற்று, சாம்பல் நிற நீர் நிரப்பட்டப்பட்ட ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து முதல்வர் ரேகா குப்தாவின் வீட்டு முன்பு வந்தனர். அந்த தண்ணீர் யமுனை நீர் என்றும், நதி நீர் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் முதல்வர், அந்த தண்ணீரை குடிக்க வேண்டும் என்றும் சவுரப் பரத்வாஜ் சவால் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ஆற்றின் தூய்மை குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நதியை சுத்தம் செய்யும் விழிப்புணர்வு இயக்கத்திற்காக டெல்லி பா.ஜ.க எம்.எல்.ஏ ரவீந்தர் சிங் நேகி ரீல்ஸ் எடுக்க முயன்ற போது யமுனை நீரில் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவை ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ சஞ்சீவ் ஜா தனது எக்ஸ் பக்கத்திஒல் பகிர்ந்து, ‘தேசிய தலைநகரின் பா.ஜ.க தலைவர்களுக்கு வெற்று வாக்குறுதிகளை வழங்குவது ஒரு தொழிலாகிவிட்டது’ என்று கூறினார். 19 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், பட்பர்கஞ்ச் பா.ஜ.க எம்.எல்.ஏ ரவீந்தர் சிங் நேகி இரண்டு பாட்டில்களை வைத்திருந்து ஆற்றின் கரையில் காணப்படுகிறார். அவர் மண்டியிட்ட நிலையில் இருந்து எழுந்திருக்க முயற்சிக்கும்போது, ​​சமநிலையை இழந்து தண்ணீரில் தவறி விழுகிறார். அருகிலுள்ள ஒருவர் உதவ முயற்சிக்கும் போது, எம்.எல்.ஏ தன்ணீரில் செல்கிறார். முழுமையாக நனைந்த எம்.எல்.ஏ பின்னர் தன்னை வெளியே இழுக்க ஒரு மூங்கில் கட்டமைப்பை நோக்கி கை நீட்டுகிறார் என்று வீடியோவில் காணப்படுகிறது.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி வழிபடுவதற்காக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை எடுத்து யமுனை நதி நீர் கரையில் தனியாக குளம் போல் பா.ஜ.கவினர் அமைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று முடிவடையும் சத் பூஜைக்கு மத்தியில், ஆளும் பா.ஜ.க மற்றும் எதிர்கட்சியான ஆம் ஆத்மியும் யமுனாவின் நிலை குறித்து பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுகின்றன. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே அரசியல் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
Follow Us