மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்தி மொழிக்கு எதிராக குரல் எழுந்து வருகிறது. மகாராஷ்டிராவில் மராத்தியில் பேசவில்லை என்றால் கன்னத்தில் அறையுங்கள் என்று நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சில மாதங்களுக்கு பேசியிருந்தார். அவரது பேச்சு, மகாராஷ்டிராவில் பேசுபொருளானது. இதனை தொடர்ந்து, மராத்தி மொழி பேசதாவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரப் போட்டியில் பிரிந்த உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இந்தி திணிப்புக்கு எதிராக ஒன்றாக சேர்ந்திருப்பது அம்மாநில அரசியலில் புதிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
கடந்த ஜூன் 28ஆம் தேதி மராத்தி பேசாததால் பயந்தர் பகுதி இனிப்புக் கடைக்காரர் ஒருவரை நவநிர்மாண் சேனா கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பயந்தர் பகுதியில் உள்ள வணிகர்கள், கடை உரிமையாளரைத் தாக்கிய நவநிர்மாண் சேனா கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு பெரிய போராட்டத்தை நடத்தினர். அதனை தொடர்ந்து, வணிகர்கள் நடத்திய போராட்டத்தை எதிர்கொள்ள கடந்த ஜூலை 8ஆம் தேதி ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா கட்சியினர் தானே பகுதியில் பேரணி நடத்த திட்டமிட்டு அந்த பகுதியில் பெருந்திரளாக கூடினர. ஆனால், அனுமதியின்றி வீதிகளில் கூடியதால் நவநிர்மாண் சேனா கட்சியினரை, போலீசார் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். மீரா பயந்தர் பகுதியில் இந்த சம்பவம், மாவட்டத்தையே ஸ்தம்பிக்க வைத்தது.
மொழி தொடர்பான சர்ச்சை அம்மாநிலத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், மும்பையின் சில பகுதிகளில் மராத்தி பள்ளிகளை காங்கிரஸ் தொடங்க இருப்பதாக செய்தி வெளியாகின. இது குறித்து கருத்து தெரிவித்து மகாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானே, மதரஸாக்களில் உருது மொழிக்குப் பதிலாக மராத்தி மொழியைக் கற்பிக்க வேண்டும் என்று கூறியதால் சர்ச்சை வெடித்துள்ளது. நிதேஷ் ரானே கூறியதாவது, “காங்கிரஸ் ஏன் மராத்தி பள்ளிகளை நடத்த வேண்டும்? எதிர்க்கட்சிகள், முஸ்லிம்களை மராத்தியில் பிரார்த்தனை செய்ய சொல்ல வேண்டும். நமது கோயில்களுக்கு வெளியே ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் எழுகிறது, ஆனால் கடைகளுக்குள் அங்கே அப்துல் அமர்ந்திருக்கிறார். தனியாக மராத்தி பள்ளிகள் தேவையில்லை. மதரஸாக்களில் உருதுக்கு பதிலாக மராத்தி கற்பிக்கவும். மதரஸாக்களில் மராத்தி கற்பிக்க மதகுருமார்களிடம் சொல்லுங்கள். அப்போது தான் உண்மையான கல்வி அங்கே நடக்கிறது என்பதை நாங்கள் உணர்வோம். இல்லையென்றால் அங்கிருந்து துப்பாக்கி மட்டுமே வரும்” என்று கூறினார்.
அமைச்சர் நிதேஷ் ரானேவின் இந்த கருத்துக்கள் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. மதம் மற்றும் மொழியின் பெயரால் அமைச்சர் நிதேஷ் ரானே வெறுப்பை பரப்புவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளதாவது, ‘மகாராஷ்டிராவில் சில பா.ஜ.க தலைவர்கள் மொழி மற்றும் மதத்தின் பெயரில் வெறுப்பை பரப்பி அமைதியை சீர்குலைக்கின்றனர். இத்தகைய நபர்களை தடுப்பது முதல்வரின் பொறுப்பு’ என்று கூறியுள்ளார்.