பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மார்பிங் வீடியோ வெளியிட்டதால் காங்கிரஸ் தலைவரை பொது இடத்தில் வைத்து சேலை அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

மகாராஷ்டிரா மாநிலம் டோம்பிவலியைச் சேர்ந்தவர் மூத்த காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் பகரே. இவர் சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி சிவப்பு நிற சேலையில் இருப்பது போன்ற ஒரு ஏஐ (AI) மார்பிங் வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டார். அதில் அவர், ‘மன்னிக்கவும் பெண்களே, நானும் டிரண்டிங்கில் இருக்க விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டு பிரதமர் மோடி சிவப்பு நிற சேலையில் மராத்தி பாடலுக்கு ஆடுவது போன்ற மார்பிங் வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி பரவியது. காங்கிரஸ் நிர்வாகி பிரகாஷ் பகரேவின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். 

மேலும், பிரகாஷ் பகரேவின் இந்த பதிவு பா.ஜ.கவின் கல்யாண் மாவட்டப் பிரிவிலிருந்து கடுமையான எதிர்வினைகளைப் பெற்றது. பிரதமரை அவமதிப்பது போன்ற செயலில் ஈடுபட்ட பிரகாஷ் பகரேவை பழிவாங்க உள்ளூர் பா.ஜ.கவினர் திட்டம் தீட்டினர். இதனிடையே டோம்பிவலி கிழக்கு பகுதியில் உள்ள மன்படா சாலை அருகே பிரகாஷ் பகரே வழக்கமாக காலை நேரத்தை செலவிடுவதாக பா.ஜ.க தலைவர்களுக்கு தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி மாவட்ட பா.ஜ.க தலைவர் நந்து பராப், மண்டலத் தலைவர் கரண் ஜாதவ், சந்தீப் மாலி மற்றும் தத்தா மாலேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இன்று (23-09-25) காலை அந்த இடத்திற்குச் சென்று பிரகாஷ் பகரேவை சூழ்ந்து கொண்டனர்.

அப்போது வெள்ளை குர்தா, பைஜாமா மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட கருப்பு காலணிகள் அணிந்திருந்த பகரேவுக்கு, ஒரு உள்ளூர் துணிக்கடையில் இருந்து வாங்கிய ரூ.5,000 மதிப்புள்ள புத்தம் புதிய அலங்கரிக்கப்பட்ட சேலையை பா.ஜ.கவினர் வலுக்கட்டாயமாக அணிவித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.கவின் கல்யாண் மாவட்டத் தலைவர் நந்து பராப், ‘சமூக ஊடகங்களில் எங்கள் மூத்த தலைவர்களை யாராவது அவமதிக்க முயன்றால், நாங்கள் அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம். இன்று, பிரதமரை அவமதித்ததால் பகரே இதை பொதுவில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்’ என்று கூறினார். 

Advertisment