சாலையில் ஒரு பெண்ணையும் அவரது மகனையும் பா.ஜ.க தலைவர் ஒருவர் செருப்பால் கொடூரமாக அடித்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், நொய்டா மாவட்டத்தில் உள்ள கஸ்னா என்ற பகுதியைச் சேர்ந்தவர் அதீக் பதான். இவர் அப்பகுதியின் பா.ஜ.க மண்டல அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஜூன் 30ஆம் தேதி காலை மின்கம்பி தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை அறிந்த அதீக் பதான், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தலையிட்டுள்ளார்.
இருப்பினும், அந்த இரண்டு பெண்களுக்கு இடையே வாக்குவாதம் அதிகரித்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அதீக் பதான் சில குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து, ஒரு பெண்ணை உடல் ரீதியாக தாக்குதல் நடத்தியுள்ளார். அப்பகுதியின் பொதுமக்கள் முன்னிலையில் அந்த பெண்ணை, செருப்பாலும் குச்சிகளாலும் கடுமையாக தாக்கினார். அந்த பெண்ணின் மகன் அங்கு வந்து தடுக்க முற்பட்ட போது அவரையும், அதீக் பதான் கடுமையாக தாக்கினார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் உத்தரப் பிரதேச காங்கிரஸ், இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ‘ஒரு பெண்ணையும் அவரது மகனையும் செருப்பாலும் தடிகளாலும் அடிக்கும் இந்த வெட்கமற்ற மனிதர் ஒரு பா.ஜ.க தலைவர். முதல்வர் தனது சொந்த கட்சியினரிடம் இருந்து பெண்களைப் பாதுகாக்க தவறிவிட்டார். இது வெட்கக்கேடானது!’ என்று குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அதீக் பதானை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.