அமெரிக்காவின் மிகப் பெரிய நகரமாகவும், உலகளவில் பெரிய பங்கு சந்தைகள் இயங்குகிற முக்கிய இடமாகவும் விளங்குகிறது நியூயார்க். இந்த நகரில் சுமார் 125 பில்லியனர்கள் வசித்து வருகின்றனர். உலக பொருளாதாரத்தின் முக்கிய தலமாக பார்க்கப்படுகிற நியூயார்க் நகரின் தேர்தல்கள் எப்போதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.
அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த மேயர் தேர்தலானது அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. இந்த தேர்தலில் முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ, குடியரசு கட்சி சார்பில் கர்டிஸ் ஸ்லிவா மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஸோஹ்ரான் மம்தானி ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 34 வயதான மம்தானி மற்ற இருவரையும் தோற்கடித்து நியூயார்க் நகரத்தின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவின் முதல் முஸ்லிம் மேயர், தெற்காசியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் போன்ற சிறப்புகளை பெற்றுள்ளார். மேலும் 1892 ஆம் ஆண்டுக்கு பிறகு, நியூயார்க்கின் மிக இளம் வயது மேயரும் இவரே. வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி மேயர் பதவியை ஏற்கிறார் மம்தானி. அதே நேரம், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உட்பட தேசிய குடியரசு கட்சியினர்கள் பலரின் எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்களுக்கு உள்ளானார் மம்தானி. மேலும் இவர் வெற்றி பெற்றால் நியூயார்க் நகருக்கான அரசாங்க நிதி நிறுத்தப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில் மம்தானியின் மகத்தான வெற்றியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இதனிடையே,முதல் முறையாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நபர் இப்பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. மும்பை மாநகராட்சிக்கும் வரும் ஜனவரி மாதம் மேயர் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் மேயராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ''அமெரிக்காவில் நடந்திருப்பது வாக்கு ஜிஹாத் ஆகும்.நியூயார்க் நகரில் காணப்பட்ட அதே வகையான அரசியலை மும்பையிலும் கொண்டுவர முயற்சி நடக்கிறது. எந்த கானையும் மும்பையில் மேயராக அனுமதிக்க மாட்டோம். இவ்விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மும்பையில் யாராவது கான்களைத் திணிக்க முயன்றால், அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது" என தெரிவித்துள்ளார். தற்போது, மும்பை பா.ஜ.க தலைவர் பேசிய இந்த பேச்சுக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us