ராஜஸ்தான் மாநிலம் டோங்க் சவாய் மாதோபூரில் பாஜக தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான சுக்பீர் சிங் ஜௌனாபூரியா, ஏழை மக்களுக்குப் போர்வை வழங்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மக்கள் கடுமையான குளிரால் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, பாஜக வின் மூத்த தலைவர் சுக்பீர் மக்களுக்குப் போர்வைகளை வழங்கினார். அந்த நிகழ்ச்சியின் போது, அவர் போர்வைகளைப் பெற வந்த பெண்களிடத்தில், அவர்களின் பெயர்களைக் கேட்ட பின்பு தான் அந்த போர்வைகளை விநியோகித்துள்ளார்.

Advertisment

அப்போது ஒரு பெண்ணிடம் பெயரைக் கேட்ட போது, அவர் ஒரு முஸ்லீம் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் அந்த பெண்ணிற்குப் போர்வை வழங்குவதைத் தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், மோடியைத் திட்டும் உங்களுக்கு இந்த போர்வைகளைப் பெற உரிமையில்லை"என்று தரம் தாழ்ந்த நிலையில் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு, எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், தற்போது டோங்க் சவாய் மாதோபூரின் காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் ஹரிஷ் சந்திர மீனா, இந்த வீடியோவைப் பகிர்ந்து கொண்டதுடன், ‘சுக்பீரின் நடத்தை மிகவும் கண்டிக்கத்தக்கது. இது நாட்டின் சமூகக் கட்டமைப்பை அழிக்கும் ஒரு எண்ணத்தை பிரதிபலிக்கிறது. மக்கள் பொது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனால், அவர்கள் அனைவரையும் சமமாகப் பார்க்கிறார்கள். ஆனால், நீங்கள் மக்களிடம் வேறுபாடு காட்டுகிறீர்கள். தங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கு, உதவ வேண்டாம் என மோடி சொல்லியிருக்கிறாரா?’ எனக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். மேலும், தனது எக்ஸ் தளத்தில், ‘ஏழை மற்றும் ஆதரவற்ற பெண்களின் பெயர்களைக் கேட்டு போர்வைகளை விநியோகிப்பதும், அவர்களின் மதத்தை வைத்து அவர்களுக்கு அளித்த பொருளைத் திரும்பப் பெறுவதும் வெட்கக்கேடானது, மனிதாபிமானமற்றது’ என்று பதிவிட்டுள்ளார்.  

கடந்த 2014-2024 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒரு கட்சியின் மூத்த தலைவர், இவ்வாறு மக்களிடம் மத பேதம் பார்ப்பது தவறான சிந்தனையாகும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் சட்டமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, டோங்க் சவாய்  தொகுதியானது முன்னாள் துணை முதல்வரும், காங்கிரசின் மாநில மூத்த தலைவருமான சச்சின் பைலட் தொகுதி. அதனால், இந்த விவகாரம் ஆளும் கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisment