திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி., டெல்லியில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.
மக்களுக்குச் செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் தமிழ்நாடு அரசு சரியாக செய்து கொண்டிருக்கிறது. கார்த்திகைத் தீபம் தொடர்ந்து ஏற்றப்படுகிறது. கோவில் நிர்வாகமும் அறநிலையதுறையும் சேர்ந்து கார்த்திகைத் தீபத்தை மலைமீது இருக்கும் பிள்ளையார் கோவிலில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன் வழக்கமாக மலை அடிவாரத்தில் இருக்கும் கோவிலில் ஏற்றி கொண்டிருந்தார்கள். கோவில் மலைமீது கட்டப்பட்ட பிறகு அங்கு அந்த தீபம் ஏற்றப்படுகிறது.
ஆனால் திடீரென்று எந்த மதத்திற்கும் சம்பந்தமே இல்லாத ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக்கல் (சர்வே ஸ்டோன்) மீது தீபத்தை ஏற்ற வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைக்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த விசயத்தில் நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்கிவிட்டது. இப்பொழுது நீதியரசர் சுவாமிநாதன் அவர்கள் தேவையில்லாமல் தலையிட்டு அரசை மீறி ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறார்.தமிழ்நாடு காவல் துறையைத் தாண்டி, மத்திய காவல்படையைத் தீபம் ஏற்றுவோருக்குத் துணையாக அனுப்பிவைக்கிறார். இதை பயன்படுத்திக்கொண்டு பாஜக மத கலவரத்தை உருவாக்க நினைத்தது. பாஜகவைச் சேர்ந்தவர்கள் இதை இன்னொரு அயோத்தியாவாக மாற்றிவிட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அவர்களே இதை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பதிவு செய்கிறார்கள்
நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனையை எழுப்பிய பொழுது, அமைச்சர் கிரண் ரிஜூஜு மூத்த உறுப்பினர் டிஆர் பாலு அவர்களைப் பார்த்து, நீங்கள் பேசுவது உங்களுக்கும் நல்லதல்ல உங்கள் கட்சிக்கும் நல்லதல்ல என்று மிரட்டக்கூடிய வகையில் எச்சரிக்கை விடுக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு அரசின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் காழ்ப்புணர்வை உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் அவர் பேசினார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது, என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்:
தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு மாநிலத்திலும் இது போன்ற பிரச்சனைகளை கொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் அப்படியொரு பிரச்னையைக் கொண்டுவந்து மதக்கலவரத்தை உண்டாக்குவதுதான் பாஜகவின் அரசியல் வியூகம். பிரச்சனையை உருவாக்கி, அரசிற்கு கெட்ட பெயரை உருவாக்கி விட வேண்டும் என்பது தான் அவர்களது எண்ணம்.
நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னையை எழுப்பியபோது, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எங்களோடு நின்றார்கள்.
மக்களின் பக்தியை நிறுத்த வேண்டும், பக்தர்களுக்கு இடையூறுகளை உருவாக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள் நாங்கள் இல்லை. பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கி அரசியல் குளிர்காய்வதற்காக பாஜகவினர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அவர்களை அடையாளம் கண்டுகொண்டார்கள், அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஆகம விதிகள் என்று பேசக்கூடியவர்கள் அந்த ஆகம விதிகளை எல்லாம் குழிதோண்டி புதைக்க கூடிய வகையில் தீபத் திருநாள் முடிந்த அடுத்த நாள் தீபத்தை ஏற்றுவது என்பது ஆகம விதிகளின்மீது நம்பிக்கை வைத்திருக்கக்கூடிய இந்துக்களின் மனதை புண்படுத்தக்கூடியது.
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது. மத பிரச்சனைகள் இல்லாத மாநிலமாக இருக்கிறது. பாஜக, ஆட்சி செய்யும் ஓர் இடத்திலாவது மத நல்லிணக்கமும் அமைதியும் இருக்கிறதா? யாரால் அங்கு மதப் பிரச்சனைகள் உருவாகிறது? அப்படிப்பட்ட பிரச்சனைகள் இல்லாத, மனிதர்கள் மனிதர்களாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை திமுக ஆட்சி உருவாக்கி தந்திருக்கிறது. அதைக் குலைக்கத்தான் பாஜக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
Follow Us