பீகார் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக பா.ஜ.கவின் புதிய தேசிய தலைவர் குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க கட்சியின் தேசிய தலைவராக மத்திய அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான ஜே.பி.நட்டா, பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 2019இல் பா.ஜ.கவின் செயல் தலைவராகப் பதவி வகித்ததைத் தொடர்ந்து, கடந்த 2020 ஜனவரி முதல் பா.ஜ.க தேசிய தலைவராக ஜே.பி.நட்டா பதவி வகித்து வருகிறார். இவரது பதிவிக்காலம், அதிகாரப்பூர்வமாக 2023இல் முடிவடைந்தது. ஆனால், கடந்தாண்டு மக்களவைத் தேர்தலின் போது கட்சியை வழிநடத்துவதற்காக அவரது பதவிக்காலத்தை ஜூன் 2024 வரை பா.ஜ.க நீட்டித்தது.
ஜே.பி நட்டா பதவிக்காலம் ஜூன் 2024 முடிந்து ஒரு வருடம் ஆகியும், பா.ஜ.கவின் அடுத்த தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருவதால் புதிய தேசியத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக ஆலோசனை பா.ஜ.கவுக்குள் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. பா.ஜ.கவின் விதிகள்படி, தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, நாட்டில் உள்ள மாநிலங்களில் குறைந்தது 19 மாநிலங்களில் அதன் மாநிலத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பா.ஜ.க புதிய தேசியத் தலைவரை நியமிக்கத் தயாராகி வருவதாகவும் பீகார் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே இந்த முடிவு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தேசியத் தலைவர் இறுதி செய்யப்படுவதற்கு முன்பு, உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடகா போன்ற முக்கிய மாநிலங்களில் புதிய மாநிலத் தலைவர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்காக கட்சியின் உயர்மட்ட குழு, மாநிலப் பதவிக்கான வேட்பாளர்களின் குழுவை அமைத்துள்ளதாகவும், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி முடிந்த பிறகு புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான அட்டவணை வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இவை அனைத்தும் பீகார் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே நடைபெறும் என்று கூறப்படுகிறது. பீகார் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு தேர்வு நடைபெறவில்லை என்றால், நியமனம் ஒத்திவைக்கப்பட்டு தேர்தலுக்குப் பிறகுதான் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.