அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த ஹிமந்த பிஸ்வா சர்மா பதவி வகிக்கிறார். இந்நிலையில், திமா ஹசாவோ மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான 3,000 பிகா (8.1 கோடி சதுர அடி) நிலத்தை மஹாபல் சிமென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு அசாம் மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மஹாபல் சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கு 2,000 பிகா நிலம் ஒதுக்கப்பட்டது. பின்னர், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கூடுதலாக 1,000 பிகா நிலத்துடன் சேர்த்து, மொத்தம் 3,000 பிகா நிலம் 30 ஆண்டு குத்தகை முறையில் தனியார் சிமென்ட் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் மஹாபல் சிமென்ட்ஸ் அதானியுடையது என்று குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், அனைத்தையும் அதானிக்கு விற்கும் முடிவில் பாஜக இறங்கிவிட்டதாக குற்றம்சாட்டி வருகிறது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையின்போது, அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் தரிசு நிலங்கள் என்றும், அவை சிமென்ட் ஆலை இயக்குவதற்கு அவசியமானவை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் மேதி, “3,000 பிகா நிலம் என்பது ஒரு முழு மாவட்டம்..! என்ன நடக்கிறது? ஒரு தனியார் நிறுவனத்திற்கு 3,000 பிகாவை எப்படி ஒதுக்க முடியும்? இது என்ன மாதிரியான முடிவு? இது என்ன ஜோக்கா..? அரசுக்கு தனியார் நலன் அல்ல, பொது நலனே முக்கியம்,” என்று லெப்ட் ரைட் வாங்கினார்.
மேலும், இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ், திமா ஹசாவோ மாவட்டம் ஒரு தன்னாட்சிப் பகுதியாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, அங்கு வாழும் பழங்குடி மக்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், திமா ஹசாவோ மாவட்டத்தில் உள்ள உம்ராங்சோ, வெப்ப நீரூற்றுகள், புலம்பெயர் பறவைகளுக்கான தங்குமிடம், வனவிலங்குகள் போன்றவற்றைக் கொண்ட சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்த நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், “அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, சிமென்ட் தொழிற்சாலைக்காக 3,000 பிகா (81 மில்லியன் சதுர அடி) பழங்குடி நிலத்தை அதானி நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறார். ஏழை மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது, நாட்டின் வளங்களை மோடியின் நண்பரான அதானிக்கு வெட்கமின்றி ஒப்படைக்கும் பாஜக அரசின் நடவடிக்கைகள் அப்பட்டமான கூட்டு முதலாளித்துவத்தை ஆதரிக்கின்றன. இது மக்களுக்கான ஆட்சி அல்ல; மோடியின் நண்பர் அதானியின் ஆட்சி. அவர்களின் செயல்களுக்கு அவர்களைப் பொறுப்பேற்கச் செய்து, மக்களுக்கு உண்மையிலேயே சேவை செய்யும் அரசாங்கத்தைக் கோர வேண்டிய நேரம் இது” என்று காட்டமாக விமர்சித்துள்ளது.
காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அதானி குழுமம், மஹாபல் சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது. அசாம் மாநிலத்திற்கு அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், தற்போது இந்த சம்பவம் அரசியல் களத்திலும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.