பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம்-காங்கிரஸ் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி என்று பீகார் தேர்தல் களத்தில் தற்போது மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.
இந்த சூழ்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க ஆகியவை தலா 101 தொகுதிகளில் போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும், சிராக் பாஸ்வானின் லோக் ஜன் சக்தி கட்சிக்கு 29 தொகுதிகளும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா, ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சாவுக்கு தலா 6 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து, பா.ஜ.க சார்பில் போட்டியிடும் 71 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை வெளியிட்டது. இதில், கூட்டணி கட்சிகள் ஆளுமையில் இருக்கும் பல தொகுதிகளை பா.ஜ.க எடுத்துக் கொண்டு வேட்பாளர்களை அறிவித்ததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், 12 பேர் கொண்ட 2வது வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க இன்று வெளியிட்டுள்ளது. அதில் நேற்று பா.ஜ.கவில் சேர்ந்த பிரபல நாட்டுப்புற பாடகி மைதிலி தாகூருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ.கவில் இணைந்த சில மணி நேரத்திலேயே பாடகி மைதிலிக்கு அலிநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது தற்போது பேசுபொருளாகி மாறி வருகிறது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மைதிலி, இந்தி, உருது, மராத்தி, போஜ்புரி, பஞ்சாபி, தமிழ், ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் பாடல் பாடியுள்ளார். தனது 14 வயதில் இருந்தே இசை கச்சேரிகளை நடத்தி வரும் மைதிலி, நேற்று பீகார் பா.ஜ.க மாநிலத் தலைவர் திலிப் குமார் ஜெய்ஸ்வால் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.