பாலியல் இச்சைக்கு இணங்க வற்புறுத்தி பெண்ணை மிரட்டும் பாஜக கவுன்சிலர் கணவரின் வீடியோ வைரலாகி வருகிறது. ராம்பூர் பகலன் நகர பஞ்சாயத்தின் பாஜக கவுன்சிலரின் கணவர் அசோக் சிங் ஆவார். இவர் ஒரு பெண்ணை தனது ஆசைக்கு இணங்க சொல்லி மிரட்டிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிங் ஒரு போலீஸ் அதிகாரியைத் திட்டுவதும், பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுவதும், தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறுவது போன்ற காட்சிகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் வார்டு எண் ஒன்றின் முன்னாள் கவுன்சிலராகவும் இருந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து, புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவுகள் 74, 75(2), 79, 296(1) மற்றும் 351(3) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணையிலோ அல்லது அதிகாரப்பூர்வ அறிக்கைகளிலோ பாலியல் வன்கொடுமை உறுதிப்படுத்தப்படவில்லை. சிங் ராம்பூர் பகலன் காவல் நிலையத்தால் காவலில் எடுக்கப்பட்டுள்ளார் என்றும், ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார் எனக்கூறப்படும் தகவலும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு கத்தியைக் காட்டி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளார். மேலும் புகாரில் கூறப்பட்டதாவது, " சிங் தனது வீட்டிற்குள் நுழைந்து, தன்னைத் தாக்கியதுடன், அந்தத் தாக்குதல் சம்பவத்தை தனது மொபைல் போனில் பதிவு செய்தார். இது பற்றி யாரிடமாவது கூறினால் தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொன்று விடுவதாகவும் மிரட்டினார். பயத்தின் காரணமாக தான் இதுவரை அமைதியாக இருந்ததாகவும், ஆனால் டிசம்பர் 20 அன்று மறுபடியும் சிங் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்து மீண்டும் மிரட்டல்களை விடுத்ததாகவும், தனது விருப்பங்களுக்கு தொடர்ந்து இணங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அந்த வீடியோவை வெளியிட்டு பொதுவெளியில் அவமானப்படுத்திவிடுவதாக அவர் மிரட்டியதாகவும்" அப்பெண் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் அப்பெண் கூறுகையில், ஐந்து நாட்களுக்கு முன்பே அதிகாரிகளை அணுகியதாகவும், ஆனால் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறி, காவல்துறையின் செயலற்ற தன்மையைக் குற்றம் சாட்டியுள்ளார். தனக்கோ அல்லது தனது குடும்பத்தினருக்கோ ஏதேனும் தீங்கு நேர்ந்தால், அதற்கு காவல்துறையே பொறுப்பாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/29/5925-2025-12-29-22-06-50.jpg)