ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோஹித் சைனி. பாஜகவின் முக்கிய பிரமுகராக அறியப்படும் ரோஹித் சைனிக்கு, சஞ்சு சைனி என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பின், இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி அன்று, சஞ்சு சைனி வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு சடலமாகக் கிடந்தார். இதுதொடர்பாக, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த அவரது கணவர் ரோஹித் சைனி, யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன், நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு, மனைவியைக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறி கதறி அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து, சஞ்சு சைனியின் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரோஹித் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, தப்பிச் சென்ற கொள்ளையனை தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த சூழலில், வீட்டில் கொள்ளையன் வந்து சென்றதற்கான எந்தத் தடயமும் கிடைக்காதது காவல்துறையினருக்கு சந்தேகத்தை எழுப்பியது. இதனால், ரோஹித்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவர் முதலில் கூறிய தகவலுக்கும், பின்னர் கூறிய தகவலுக்கும் முரண்பாடு இருந்துள்ளது. இதனால், காவல்துறையின் முழு கவனமும் ரோஹித் மீது திரும்பியது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது, பல திடுக்கிடும் உண்மையை கூறியிருக்கிறார்.
அதில், ரோஹித் சைனிக்கு, ரீது என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கத்தை அதிகரிக்க, பின்னர் அது திருமணத்தை மீறிய உறவாகவும் வளர்ந்திருக்கிறது. இதனால், இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்து வந்தனர். ஆனால், இந்த விவகாரம் மனைவி சஞ்சு சைனிக்குத் தெரியவந்ததால், அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ரீதுவுடனான உறவை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால், ரோஹித் சைனிக்கு ரீதுவுடனான உறவைக் கைவிட மனமில்லை.
இதனிடையே, ‘சஞ்சு சைனி இல்லையென்றால், நாம் இருவரும் சந்தோஷமாகச் சேர்ந்து வாழலாம்...’ என்று ரீது, காதலன் ரோஹித்திடம் கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட ரோகித், திருமணத்திற்கு மீறிய உறவுக்கு தடையாக இருந்த சஞ்சுவைக் கொலை செய்யத் திட்டமிட்டு, சம்பவத்தன்று கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். மேலும், தான் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக, வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன் சஞ்சுவைக் குத்திக் கொன்றுவிட்டு, நகைகளைத் திருடிச் சென்றதுபோல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, ரோஹித் மற்றும் ரீது ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் குமார், “இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்துள்ளோம். காதலி ரீதுவின் அழுத்தத்தால், மனைவியைக் கொலை செய்ததாக ரோஹித் ஒப்புக்கொண்டுள்ளார். இருவரையும் கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
திருமணத்திற்கு மீறிய உறவில் காதலி கொடுத்த அழுத்தத்தால், தனது மனைவியைக் கொன்று நாடகமாடிய பாஜக பிரமுகரின் செயல் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.