மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாள் இன்று (02-10-25) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை கொண்டாடும் விதமாக டெல்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். அதே போல், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு டெல்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நாளையொட்டி நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு காந்தி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரும் நிலையில், மதுரையில் உள்ள காந்தி சிலைக்கு காவித்துண்டி அணிவிக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மதுரையில் புகழ்பெற்ற காந்தி அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இந்த காட்சியகத்தில் உள்ள பொருட்களை காண தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்வர்.
இந்த நிலையில், காந்தி ஜெயந்தியை ஒட்டி இந்த காட்சியக முகப்பில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் அரவிந்த் தலமையிலான பா.ஜ.கவினர், காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு காவித்துண்டு அணிவித்துள்ளனர். பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு பொதுவாக இருக்கும் காந்திக்கு, குறிப்பிட்ட மதத்தை குறிக்கும் வகையில் காவித்துண்டு அணிவிக்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.