கூடவே இருக்கிற எதிரிகளச் சமாளிச்சிறலாம். ஆனா உட்கட்சி எதிரிகளச் சமாளிக்க முடியலியே சாமி, தேர்தல் வரைக்கும் பொழுதை எப்படி ஓட்டப் போகிறேனோ என்ற கலக்கத்தில் உறக்கம் தொலைந்து தவிக்கிறாராம் பா.ஜ.க.வின் மாநில த.வான நயினார் நாகேந்திரன். டிசம்பர் 09 அன்று தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு காலை 11.30 மணியளவில் வந்த வந்தேபாரத் ரயிலின் குறிப்பிட்ட அந்த பெர்த்தை சுற்றி வளைத்த திண்டுக்கல்லைச் சேர்ந்த தனிப்படை போலீசார் சந்தேகத்தில் அதிலிருந்து சூட்கேசுடன் வந்திறங்கிய நபரை தனியே அழைத்துச் சென்று சோதனையிட்டனர். இதில், சூட்கேசில் 10.50 லட்சம் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

Advertisment

 தொடர்ந்து தனிப்படை அவரிடம் விசாரணை மேற் கொண்டதில் அவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த நீலமுரளி யாதவ் என்பதும், பா.ஜ.க.வின் நெல்லை கோட்ட தேர்தல் பணி பொறுப்பாளர் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து தனிப்படையினர் விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர் பணத்துடன் போலீசாரிடம் சிக்கிய தகவலையறிந்த கோவில்பட்டி நகர பா.ஜ.கவின் நிர்வாகிகள் பதற்றத்துடன் அங்கு திரண்டு வர, அதற்குள்ளாக நிர்வாகி நீல முரளியாதவை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் செல்வதைப் பார்த்தவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்திருக்கிறார்கள். பா.ஜ.க.நிர்வாகி நீலமுரளி யாதவ் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அவரை சாத்தூர் சிவகாசி, என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்த தனிப்படை பின்னர் அவரை கோவில்பட்டியின் கிழக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இது தகவலறிந்த உள்ளூர் பா.ஜ.க.வினரும் காவல் நிலையம் முன்பாகக் கூடியிருக்கிறார்கள். பதட்டமும் பரபரப்புமான சூழல்.

Advertisment

தொடர்ந்து தனிப்படையினர் அங்கு அவரிடம் விசாரணை நடத்தியதில். இது தன் சொந்தப் பணமல்ல, கட்சிப் பணம். சென்னை கட்சி அலுவலகத்திலிருந்து நெல்லைக்கு எடுத்துச் செல்வதாகச் சொன்னவர், அங்கே நடக்கிற எஸ்.ஐ.ஆர். பயிற்சிபட்டறைக்கான செலவுகள் மண்டபங்களின் வாடகைக்காகவும் கொண்டு செல்லப்படுவதற்கான ஆவணங்களைக் காட்டிய பின்பே தனிப்படையினர் வருவாய்த்துறையினர் முன்னிலையில் 10.50 லட்சத்தை நீல முரளியாதவிடம் ஒப்படைத்து அவரை விடுவித்திருக்கிறார்கள். இந்த சந்தேக விசாரணை மாலை 04.30 மணி வரை நீடித்திருக்கிறது. விசாரணைக்குப் பின் வெளியே வந்த நீல முரளியாதவ், நான் அதிகாலை 5.30 மணிக்கு சென்னையிலிருந்து நெல்லைக்குப் புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் வந்தேன் காலை 9.30 மணியளவில் திண்டுக்கல் வந்த போது சீருடை மற்றும் சீருடையல்லாத சுமார் 15 போலீசார் ரயிலில் ஏறினர்.

nainar-matter-1

என்னுடைய கம்பார்ட்மெண்ட்டில் சோதனையிட்டவர்கள் என்னனக் குறியிட்டு சோதனையிட்டவர்களிடம் எனது பையிலிருந்த 10.50 லட்சம் பணம் அத்துடனிருந்த ஆவணத்தையும் எடுத்து விசாரித்தார்கள். நான் எஸ்.ஐ.ஆர். பயிலரங்கம் தொடர்பாக நெல்லை கொண்டு செல்வதாகச் சொன்னதுடன் கட்சித் தலைமை ஆலுவலகத்தில் என்னிடம் தரப்பட்ட பணத்திற்கான நான் கையெழுத்திட்ட டெலிவரி சிலிப் ஆவணத்தைக் காட்டிய பிறகே பணத்தையும் என்னை விடுவித்தார்கள். திண்டுக்கல்லில் ஏறிய போலீசார் குறிப்பிட்ட என்னுடைய கம்ப்பார்ட்மெண்ட்டில் சீட் நம்பருடன் என்னை டார்கெட் பண்ணது தான் எனக்கு சந்தேகம். இவ்வளவு துல்லிய தகவல் மற்றும் இந்தப் பணம் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைக்கச் செல்வது பற்றியது போலீசாருக்கு எப்படி கச்சிதமா எட்டியது என்று தெரியவில்லை. என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisment

இது குறித்து நம்மிடம் பேசிய நெல்லை மாவட்ட பா.ஜ.க.வின் முக்கிய நபர் ஒருவரோ, நெல்லை மாவட்ட பா.ஜ.க. கோட்டத்தின் 11 சட்டமன்றத்திலும் பா.ஜ.க.வின் பூத்கமிட்டி உறுப்பினர்களின் எஸ்.ஐ.ஆர். சரிபார்ப்பு பணிச்செலவிற்கானது, ஒவ்வொரு சட்டமன்றத்திற்கு ஒன்றரை லட்சம் செலவு என்று ஒதுக்கப்பட்டு மொத்த 16.50 லட்சம் வழங்கப்பட்து. பா.ஜ.க.வின் ஒரு நிர்வாகி 6 லட்சம் கொண்டு வர, நீலமுரளியாதவ்விடம் கட்சி ஒப்படைத்த 10.50 லட்சம் சிக்கி விட்டது. தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைக்கப்பட வேண்டியது. இத்தனை கான்கீரீட்டான தகவல் போலீசுக்கு எப்படித் தெரிந்தது என்பது தான் எங்களின் ஆச்சரியம். உளவுப் புள்ளி வெளியேயிருந்து வரவில்லை கட்சிக்குள்ளேயேயிருக்கிற நயினாருக்கெதிரான எதிரிகள் தான் போட்டுக் கொடுத்திருக்க வேண்டும் என்றார் அழுத்ததுடன்.

nainar-matter

இந்த சம்பவத்தால் ஆடிப்போயிருக்கிறாராம் மா.த. நயினார் நாகோந்திரன். கடந்த மக்களவைத் தேர்தலின் போது வாக்காளர்களுக்காக சென்னை தாம்பரத்திலிருந்து நெல்லைத் தலைவருக்கு வந்த 5 ’சி’ ஹாட் கேஷ் கூட துல்லிய தகவலனடிப்படையில் கடைசி நேரத்தில் சென்னை போலீஸ் வசம் சிக்கி வழக்காகி தவிப்பது, தற்போது தனது ஆதரவாளரான நீலமுரளியாதவ் ரயிலில் வந்த போது அதனை ஸ்கெட்ச் போட்டு போலீஸ் கோவில்பட்டியில் மடக்கியது. இப்படியான புள்ளித் தகவல்கள் தனது உள்கட்சி எதிரிகளாலேயே போலீசுக்குப் போவதையறிந்த பண்ணையார், எதிர்கட்சிகளைக் கூடசமாளிச்சிறலாம் உட்கட்சி எதிரிகள சமாளிக்க முடியலியே என்று திகிலில் உறைந்திருக்கிறாராம். உள் எதிரி மட்டுமில்ல, சில வேளைகள்ல நம்ம நிழலே நமக்கு எதிரி தான் பாஸ்.