கேரள மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், கடந்த 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி (யு.டி.எஃப்), பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

Advertisment

முதற்கட்டமாக 7 மாவட்டங்களில், 3 மாநகராட்சிகள், 39 நகராட்சிகள், 7 மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் 471 ஊராட்சிகளில் 11 ஆயிரத்து 166 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 7 மாவட்டங்களில் 3 மாநகராட்சிகள், 47 நகராட்சிகள், 77 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில், நேற்று (13-12-25) காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. கேரளாவின் 14 மாவட்டங்களில் உள்ள 244 மையங்களில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

Advertisment

அதில் ஆளும் எல்.டி.எஃப் கூட்டணி கட்சியை விட, காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி கட்சி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் 4 மாநகராட்சிகளை யு.டி.எஃப் கூட்டணி கட்சியும், தலா 1 இடத்தை எல்.டி.எஃப் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் கைப்பற்றியுள்ளன. 86 நகராட்சிகளில் யு.டி.எஃப் 54 இடங்களிலும், எல்.டி.எஃப் 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் யு.டி.எஃப் 7 இடங்களிலும், எல்.டி.எஃப் 11 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன

குறிப்பாக, 45 ஆண்டுகளாக எல்.டி.எஃப் கைவசம் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள 101 வார்டுகளில் 50 வார்டுகளை கைப்பற்றி அம்மாநகராட்சியை பா.ஜ.க தக்கவைத்துக்கொண்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் வர இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் நடைபெற்ற இந்த தேர்தலில், காங்கிரஸ் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியிருப்பது ஆளும் எல்.டி.எஃப் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மேலும், 45 ஆண்டுகளாக எல்.டி.எஃப் கூட்டணி கோளோச்சிய திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

Advertisment